search icon
என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.

    ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

    இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்ட தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின். இவருக்கு சொந்தமாக தென் ஆப்பிரிக்கா நாட்டில் முந்திரி பருப்பு பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இரணியல் அருகே வட்டம் பகுதியை சேர்ந்த ஷைபின் (வயது 32) என்பவரும், மேலாளராக தக்கலை அருகே புங்கறை பகுதியை சேர்ந்த ஜெயசந்திர சேகர் என்ற சதீஷ் (42) என்பவரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஷைபின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்காக தென் ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள கானா என்னும் இடத்துக்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவரின் சொகுசு காரில் ஷைபின், ஜெயசந்திரசேகர் உள்பட 3 பேர் சென்றனர். அப்போது டெமா என்னும் இடத்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வாகனத்தில் வேகமாக மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசந்திர சேகரும், ஷைபினும் உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விபத்தில் பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திரசேகர் ஆகியோரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். மேலும் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலியான ஷைபின் மற்றும் ஜெயசந்திர சேகர் உடல்கள் நாளை (27-ந்தேதி) விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (28-ந்தேதி) அவர்களின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்துபோன ஷைபினுக்கு சுஷ்மி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஜெயசந்திர சேகருக்கு மினி என்ற மனைவியும், 7 வயதில் ரியான்ஸ் என்ற மகனும். 3 வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதில் ரியானாவுக்கு தந்தை இறந்த அதே நாளில் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.

    • பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
    • கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிளை:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.

    இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    • மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.

    வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும்.

    தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் திடீரென டிரைவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை டிரைவர் மீது வீசினார். இதில் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரசு பஸ் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது ஆசிட் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.
    • குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைய உள்ளது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளைய தமிழகத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    மேலும் ஓட்டு போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போதும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

    அதே போல் இந்த முறையும் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்களின் மத்தியில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது.

    முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூரில் வசிக்கக் கூடியவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    நேற்றைய தினம் முதலே இதனை காண முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.

    வழக்கமாக நாகர்கோவில் வரக்கூடிய ரெயில்களில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தான் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நாகர்கோவில் வரும் வரை கட்டுக்கடங்காத வகை காணப்படும். கடந்த இரு தினங்களாக அதேபோன்ற ஒரு கூட்டத்தை காண முடிந்தது.

    இன்றும் சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து வந்த கோவை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

    ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் வந்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் காணப்பட்டனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் படிக்கக்கூடிய இளைஞர்கள் ஆவர். தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

    பலர் தேர்தலில் வாக்களித்துவிட்டு உடனடியாக திரும்பும் வகையிலும் திட்டமிட்டு வந்துள்ளனர். பல இளைஞர்கள் பயணத்தின்போது சக நண்பர்களுடன் தேர்தலில் வாக்களிப்பது குறித்து மிகவும் ஆர்வமாக பேசி வந்ததை காண முடிந்தது. அவர்களில் பல இளைஞர்கள் முதன் முதலாக தேர்தலில் வாக்களிப்பதாக பேசிக் கொண்டனர். அந்த இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து சக பயணிகளிடம் பேசியபடி இருந்தனர். அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து விட்டு மீண்டும் வெளியூருக்கு செல்வதற்கான பயணத்திட்டத்தையும் நண்பர்களுடன் விவாதித்தனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தவரை கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி இருக்கிறது.

    மேலும் விளவங்கோடு சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் என இரண்டு ஓட்டுகள் போட வேண்டும். இதனால் மற்ற சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்களை காட்டிலும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

    அந்த தொகுதியை சேர்ந்த புதிய வாக்காளர்களான இளைஞர்கள், முதன் முறையாக சந்திக்கும் தேர்தலிலேயே இரு ஓட்டுகள் போடும் வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி பூரிப்படைந்துள்ளனர். 

    • மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் காலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய கற்றுவா, பத்துகாணி, ஆறுகாணி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

    இந்த பிரசாரத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பினுலால் சிங், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மலைவாழ் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் விஜய் வசந்த் கூறியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் பா.ஜனதா அரசை விரட்டியடிக்க நீங்கள் அனைவரும் எங்கள் இருவருக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் வாழக்கூடிய மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது அங்கு ஆளும் பா.ஜனதா அரசு கலவரங்களை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்து அதை வீடியோவாக வெளியிட்ட அவல நிலை பா.ஜனதா ஆளுகிற மாநிலத்தில் நடைபெற்றது. நம் நாட்டில் அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் நிலவ மக்கள் அனைவரும் அன்புடனும், சந்தோஷத்துடன் வாழ்வதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் காப்பாற்றப்படும்.

    குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரப்பர் தொழிற்சாலை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களின் வசதிக்காக பஸ் மற்றும் மின்சார வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உங்கள் விஜய் வசந்த் ஆகிய எனக்கும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டுக்கும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இன்று (புதன்கிழமை) காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் அவர் மண்டைக்காடு புதூர், மணலிவிளை, கூட்டுமங்கலம், கல்லத்திவிளை, காட்டுவிளை, நடுவூர்க்கரை, சேரமங்கலம், பரப்பற்று, பெரியவிளை, மணவாளக்குறிச்சி, முட்டம், அம்மாண்டிவிளை, திருநயினார்குறிச்சி, வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, ஈத்தங்காடு, மேலமணக்குடி, கொட்டாரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாகர்கோவிலில் மாலை அவர் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல்.

    நாகர்கோவில்:

    இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் தினமும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவரை மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்தூவியும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டம் பகுதியில் விஜய் வசந்த் பிரசாரத்தை தொடங்கினார். இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை, குளச்சல் கடற்கரை, கூத்தவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை திறந்த வாகனத்தில் சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குருந்தங்கோடு, கண்டன்விளை, பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம், பரசேரி, ஆளூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக, மிக முக்கியமான தேர்தல். பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய தேர்தல். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை. மாறாக, ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர்.

    ×