search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marthandam"

    டிரைவருடன் கடத்தப்பட்ட லாரி விபத்தில் சிக்கியதால் அந்த லாரியில் வந்த 10 பேர் கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழித்துறை:

    கருங்கல் முள்ளங்கினா விளையைச் சேர்ந்தவர் ராபர்ட் கிறிஸ்டியான். இவருக்கு சொந்தமான லாரியில் டிரைவர்களாக ஜெயக்குமார், ராஜா ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த லாரி மூலம் ஆந்திராவில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலம் பரக்காணி விளை பகுதியில் நிறுத்தியிருந்தனர். இந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

    நேற்று இரவு அந்த அரிசி லாரியில் டிரைவர் ராஜா படுத்திருந்தார். அப்போது அங்கு ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர். பிறகு அவரை சொகுசு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அரிசி லாரியையும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓட்டிச் சென்றனர்.

    புல்லுவிளை பகுதியில் அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளின் காம்பவுண்டு சுவர்களை இடித்து தள்ளியபடி அந்த லாரி நின்றது. இதை பார்த்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    பொதுமக்கள் திரண்டதால் லாரி டிரைவர் ராஜாவை விடுவித்து விட்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் லாரியின் டிரைவர்கள் ராஜா, ஜெயக்குமார் மற்றும் உரிமையாளர் ராபர்ட் கிறிஸ்டியான் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரித்து வருகிறார்கள்.

    லாரியையும், டிரைவர்கள் கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினர், பைனான்ஸ் பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மார்த்தாண்டம் அருகே சகோதரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    குழித்துறை:

    மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு, தெற்ற விளையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அசோக்குமாரின் மனைவி சுமிதா. இவர்களின் வீடு அருகே அசோக்குமாரின் சகோதரர் அஜித்குமார் வீடும் உள்ளது. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    அசோக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள இன்னொரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

    இன்று காலை அசோக் குமாரின் மனைவி சுமிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் வீடுமுழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.39 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது.

    இதுபோல அசோக்குமாரின் சகோதரர் அஜித் குமார் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு அங்கிருந்த 25 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 2 வீடுகளிலும் மொத்தம் 55 பவுன் நகையும், ரூ.59 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது.

    இதுபோல மேல்புறம் பகுதியில் ஜெரால்டு என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி அவர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
    ×