என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewelry robbery"
- விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி நகரில் உள்ள ஜனதா பேட்டையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் அவரது சித்தி ரமணம்மா (வயது 85) என்பவரும் உடனிருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளருக்கு காவாலியை சேர்ந்த கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூதாட்டியை கொலை செய்து நகையை பறிக்க மாணவி திட்டம் தீட்டினார். அதன்படி கல்லூரி மாணவி அடிக்கடி யூடியூபில் கிரைம் வீடியோக்களை பார்த்து கொலை செய்வது குறித்து தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விரிவுரையாளர் தனது மனைவியுடன் நடை பயிற்சி சென்றார்.
இதனை கண்காணித்த கல்லூரி மாணவி விரிவுரையாளர் வீட்டிற்குள் சென்றார். தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவர் அணிந்து இருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றார்.
இது குறித்து காவாலி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் ரமணம்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை.
- வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.
இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்மநபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.
இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்கு புறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.
விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பால்பாண்டி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அமுதன். (வயது 40). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வேலை நிமித்தமாக குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது கார் டிரைவர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து அமுதனுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், சண்முகம், தனிப்பிரிவு காவலர்கள் பொன்பாண்டியன், கலைவாணர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
- அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- மூதாட்டிகளை குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் தாயுமானவர் சுந்தரம் வீதியை சேர்ந்த சின்னுசாமி மனைவி புனிதவதனி (70). இவர் தனது 3-வது மகன் சதீஷூடன் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கிறார். சதீஷ் ஈரோடு பொன் வீதியில் ஜூவல்லரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் புனிதவதனி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது திறந்திருந்த வீட்டின் முன்புற வாசல் வழியே 30 வயது மதிக்கதக்க வாலிபர் 2 பேர் புனிதவதனியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை படுக்கை அறையில் தள்ளி, அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.
அதிர்ச்சியில் இருந்த மூதாட்டி புனிதவதனி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் நகை பறித்த அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பேர் நகையை திருடி சென்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஈரோடு சூரம்பட்டி கிராமடை முதல் வீதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி ராமாயம்மா (82). தறி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட சென்றார்.
கிராமடை முதல் வீதி பாலம் அருகே நடந்து சென்றபோது, அப்போது அங்கு நின்று இருந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மூதாட்டியை தடுத்து நிறுத்தி இப்பகுதியில் செயின் பறிக்கும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.
இப்படி கழுத்தில் தங்க செயினை அணிந்து சென்றால் மர்மநபர்கள் பறித்து சென்று விடுவார்கள். பின்னர் அந்த நபர்கள் செயினை கழற்றி தந்தால் பர்சில் போட்டு பத்திரமாக தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ராமாயம்மா அவர்களிடம் கழுத்தில் அணிந்திருந்த 1.25 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். அவர்களும் செயினை பர்சில் போடுவதை போல நடித்து பர்சை கொடுத்து பைக்கில் அங்கிருந்து சென்றனர். சில அடி தூரம் நடந்து சென்ற ராமாயம்மா சந்தேகம் அடைந்து பர்சினை திறந்து பார்த்த போது அதில் வெறும் மண் மட்டுமே இறந்தது. செயினை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமயாம்மாவிடம் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மூதாட்டிகளை குறிவைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வியாபாரி வீட்டில் புகுந்து மாமியார், மருமகளை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி(வயது65). இவர் ஸ்பிக்நகர் பஜாரில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி மூத்த மகன் தங்கதுரை (38) சென்னையிலும், இளைய மகன் ஜான் செல்வசீனி (35) தஞ்சாவூரிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கதுரை குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர், தனது மனைவி அஸ்வினி (35) மற்றும் 5 வயது மகனை தூத்துக்குடியில் அப்பா வீட்டில் விட்டு விட்டு மீண்டும் சென்னை சென்றுள்ளார்.
நேற்று மாலை அற்புதராஜ் கடைக்கு சென்று உள்ளார். இதனை நோட்டமிட்டு அறிந்து கொண்ட 2 மர்மநபர்கள் இரவில் பர்தா அணிந்து கொண்டு அவரது வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அற்புதராஜின் மனைவி செல்வராணி (60) மற்றும் மருமகள் அஸ்வினி (35) ஆகிய 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களது கழுத்தில் இருந்த செயின் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்தனர்.
மேலும் பீரோவை திறக்கச் சொல்லி அதில் இருந்த மூக்குத்தி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட சுமார் 62 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர். தொடர்ந்து மாமியார், மருமகள் இருவரையும் அவர்களது துப்பட்டாவை வைத்து கட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அப்போது பர்தா அணிந்து சென்ற மர்மநபர்களை பார்த்து பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?. பர்தா அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேருக்கு மட்டும் தொடர்பு உண்டா? அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரி வீட்டில் புகுந்து மாமியார், மருமகளை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை மகாராஜ நகர் வேலவர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 54). இவர் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்று விட்டார். இந்நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார். இன்று காலை அங்கிருந்து நெல்லைக்கு திரும்பிய அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை காணவில்லை. மேலும் அதே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
- பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர்-ராசிபுரம் பிரதான சாலை புது ஹவுசிங் போர்டு குறிச்சி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஆத்தூர் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர் சீலியம்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் சென்னையில் வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் சென்னையில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று நாகராஜ், அவரது மனைவி புஷ்பா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள்களை பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் இன்று காலை ஆத்தூரில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் பீரோவை பார்த்தபோது அதில் வைத்து இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும் வீட்டில் வேறு ஏதாவது திருட்டு போனதா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.
ஆத்தூரில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று முன்தினம் வெங்காய வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போனது. நேற்று ஆத்தூர் பழைய ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர் வீட்டில் 13 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருட்டு போனது. இந்த நிலையில் இன்று வருவாய் ஆய்வாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
ஆத்தூர் பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.
- ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் வேல்நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது70). தனியாக வசித்து வந்த இவர் டெய்லரிங் வேலை செய்து வந்தார்.
மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் இவரது வீடு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜம்மாளின் வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பீர்க்கங்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராஜம்மாள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது ராஜம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் கொள்ளை போனது தெரிய வந்தது.
ராஜம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் பீர்க்கங்கரணை ஏரிக்கரை தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலும் கொள்ளை நடந்தது. கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கருவறையில் இருந்த ஐம்பொன் சிலையை திருடி சென்றார். இதே கோவிலில் 4-வது முறையாக திருட்டு நடந்து உள்ளது.
இந்த இரு வேறு சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மர்மநபர்கள் அரிவாள் முனையில் மிரட்டினர்.
- கொள்ளை குறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்-மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டினர். எழுந்து சென்று ஜெயராஜ் கதவைத் திறந்தார். சட்டென்று வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளை காட்டி ஜெயராஜை மிரட்டினர்.
சத்தம் கேட்டு எழுந்த சிவசங்கரியையும் மிரட்டினர். பின்னர் தம்பதியை கயிறால் கட்டி போட்டனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாள் முனையில் மிரட்டினர்.
இதையடுத்து சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 4 முக்கால் பவுன் தங்க தாலி செயின், 30 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனைத் தொடர்ந்து கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்த ஜெயராஜ் அந்த மர்மநபர்களை துரத்தி சென்றார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரிகுளம் பகுதியில் உள்ள ஜெயண்ட் விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 54). இவர் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம் தொழில் நிமித்தம் காரணமாக திருப்பூர் சென்று விட்டார். மனைவி தனலட்சுமி, மகன் கீர்த்தி வாசனுடன் சென்னையில் சித்தா படிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவையும், மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 51 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மறுநாள் காலை வேலாயுதம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அக்கம்பக்கத்தினர் வேலாயுதத்திற்கு தகவல் கொடுத்தனர். வேலாயுதம் வந்து பார்த்தபோது தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் அரங்கேறி வருவதால் போலீசார் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.