என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 12 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
    X

    மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 12 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
    • நகை கொள்ளை குறித்து கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுகுணா (வயது 46). இவர் மதுரை மாநகர வரதட்சணை தடுப்பு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    சுகுணா நேற்று இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். சுகுணா கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்புக்கு வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் சுகுணா புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை கரிமேடு வேல்முருகன் நகர் வைகை தெருவை சேர்ந்தவர் கண்ணன் ஆசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி (45). இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் மதுரா கோட்ஸ் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மாரீஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கரிமேடு போலீசில் மாரீஸ்வரி புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×