search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "elderly woman murder"

  • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
  • கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

  கம்பம்:

  தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மனைவி ராமுத்தாய் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். பேரன் போத்திராஜ் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

  அவர் தினசரி ராமுத்தாய்க்கு உணவு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இன்று காலை அவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

  வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி கொன்று விட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இன்ஸ்பெக்டர் (பொ) சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

  மேலும் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்தும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள்தான் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

  • விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி நகரில் உள்ள ஜனதா பேட்டையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

  இவர்களுடன் அவரது சித்தி ரமணம்மா (வயது 85) என்பவரும் உடனிருந்து வருகிறார்.

  இந்த நிலையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளருக்கு காவாலியை சேர்ந்த கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

  விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  மூதாட்டியை கொலை செய்து நகையை பறிக்க மாணவி திட்டம் தீட்டினார். அதன்படி கல்லூரி மாணவி அடிக்கடி யூடியூபில் கிரைம் வீடியோக்களை பார்த்து கொலை செய்வது குறித்து தெரிந்து கொண்டார்.

  இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விரிவுரையாளர் தனது மனைவியுடன் நடை பயிற்சி சென்றார்.

  இதனை கண்காணித்த கல்லூரி மாணவி விரிவுரையாளர் வீட்டிற்குள் சென்றார். தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவர் அணிந்து இருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றார்.

  இது குறித்து காவாலி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

  அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.

  இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

  அவர் ரமணம்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

  • நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் கொட்டக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை (65).

  இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சண்முகம்-நல்லம்மாள் ஆகியோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி வீட்டிற்குள் குதித்தனர். பின்னர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், சண்முகத்தை இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கினர்.

  இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அதை பார்த்த மர்மநபர்கள் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம், நகை உள்ளதா என தேடி பார்த்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

  இன்று காலை உறவினர்கள் சிலர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சண்முகத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மர்மநபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சியின் போது கொலை சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோத தகராறில் யாராவது கொலை செய்ய வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்த சண்முகம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)

  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

  நேற்று இரவு 9 மணி அளவில் அற்புதம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் பேசிவிட்டு வீட்டில் தூங்க சென்றார்.

  இன்று அதிகாலையில் வீட்டின் கதவு திறந்திருந்தது. ஆனால் அற்புதம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. காலையில் பால்காரர் வந்து வீட்டில் பார்த்தபோது அற்புதம்மாள் கொலையுண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்காரர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.

  உடனடியாக இது தொடர்பாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அற்புதம்மாள் உடலை பார்வையிட்டனர். அற்புதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை காணவில்லை. மர்மநபர்கள் அவரை கொன்று நகைகயை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

  சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீட்டை சுற்றிலும் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

  இதையடுத்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், கால் தடங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்து வருகின்றனர்.

  மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அக்கம், பக்கத்தினரிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

  வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

  அந்த வகையில் கடந்த 7-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ராமசாமி மனைவி அத்தாயம்மாள் ( 65) என்பவரை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.

  ராமசாமிக்கு அப்பகுதியில் பல ஏக்கர் சொத்து உள்ளது. வசதியான கணவன்-மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருவதை நோட்டமிட்டு அத்தாயம்மாளை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த கொலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

  இதேபோல் கடந்த 8-ந்தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு இந்த தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்தனர்.

  அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் கொலைகளை செய்தது ஒரே கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு இந்த கொலைகள் நடைபெறுவதால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.

  • சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஏழுபரன் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (60). இவர்களுக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், மல்லிகா (35) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் நேற்றிரவு சுப்ரமணி வீட்டிற்குள் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

  இன்று காலை சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

  பின்னர் கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  • முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  திருப்பரங்குன்றம்:

  மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அருகேயுள்ள வேடர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 66). மூதாட்டியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்று இரவு திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக உறங்கியுள்ளார். இன்று காலையில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

  இதுதொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருநகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

  அதன்படி முதல்கட்டமாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. பதிவான விவரங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை செய்த போது தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

  இதில் அவர்தான் இந்த கொலையை செய்ததாகவும், மூதாட்டியிடம் இருந்த நகையை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

  இதையடுத்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அலக்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அலெக்ஸ் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  நகை மற்றும் பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கொலை செய்த இளைஞரை, சம்பவம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

  • சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
  • முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார்.

  திருப்பூர்:

  திருப்பூா் எஸ்.வி. காலனி பிரதான சாலை டி.எஸ்.ஆா். லே-அவுட் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (வயது 72), ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியா். இவரது மனைவி சந்திராமணி (67). இந்த தம்பதியின் மகன் பூவேந்தனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் கே.பி.என்.காலனியில் வசித்து வருகிறார்.

  முத்துசாமியும், சந்திராமணியும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சந்திராமணி வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை ஆணையா் வனிதா, உதவி ஆணையா் அனில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

  அப்போது சந்திராமணியின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கொலையாளி யாரென்று விசாரணை நடத்தி வந்தனர்.

  முத்துசாமியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. ஆகவே, முத்துசாமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அந்தநபர்தான் சந்திராமணியை கொலை செய்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அந்த நபர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம்(60) என்பதும், முத்துச்சாமியின் நண்பர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாழப்பாடி சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூருக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்திராமணியை ஆறுமுகம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

  சேலம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முத்துச்சாமிக்கு நடக்க முடியாததால் வீட்டு முன்பு சேர் போட்டு அமர்ந்திருப்பார். அப்போது அந்த வழியாக ஆறுமுகம் போகும் போது 2பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 2பேரும் நண்பர்களாகினர்.

  முத்துச்சாமி நடக்க முடியாது என்பதால் அவரது வீட்டிற்கு தேவையான உதவிகளை ஆறுமுகம் செய்து கொடுத்துள்ளார். இதனால் அவர் மீதான நம்பிக்கையில் முத்துச்சாமி தனது வீட்டிலேயே ஆறுமுகத்தை தங்க வைத்துள்ளார். உணவும் வழங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவும் ஆறுமுகம் முத்துச்சாமி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

  அதிகாலை சந்திராமணி எழுந்து சமையல் செய்த போது அவர் அணிந்திருந்த நகையை ஆறுமுகம் பறிக்க திட்டமிட்டார். இதையடுத்து சந்திராமணி அணிந்திருந்த நகையை பறித்ததுடன், அவரை உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார். சொந்த ஊர் சேலம் என்பதால் அவர் அங்கு சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். 

  சாத்தூர் அருகே தலையில் கல்லைப் போட்டு மூதாட்டி கொடூரக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
  சாத்தூர்:

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நீண்டகாலமாக பிச்சை எடுத்து வந்தார்.

  இரவில் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் முன்பு தங்குவார். நேற்றும் வழக்கம்போல் கோவில் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டி தலையில் கல்லைப் போட்டனர். இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இன்று காலை மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

  மூதாட்டி நீண்ட காலமாக பிச்சை எடுத்து வந்தாலும் அவரது பெயர், ஊர் விவரம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் அவரிடம் பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
  ராதாபுரம் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கிணற்றில் வீசி கொன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவரது கணவர் சுவாமிதாஸ் இறந்துவிட்டார். அவரது 3மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சுப்புலட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

  இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி ஜெயக்கொடி என்பவருக்குமிடையே பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்துவந்தது. நேற்றுமாலை ஜெயக்கொடி தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு மூதாட்டி சுப்புலட்சுமியும் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயக்கொடி தனது கணவர் ஆனந்தராஜிடம் (48) கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றார்.

  அங்கு வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமியை அவர் தாக்கினாராம். பின்னர் அவரை அலேக்காக தூக்கிச் சென்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் அடிபட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதையடுத்து ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டனர்.

  பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

  ஆனந்தராஜ் மீது ஏற்கனவே அவரது தந்தையை கொலை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
  ×