என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை- போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
- புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் படுத்துள்ளார்.
- மோப்பநாய் கொலை நடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு அங்குள்ள கல்லறை மேட்டு பகுதியில் போய் நின்று விட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு (வயது 65). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சூசை இறந்து விட்டார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருச்சியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.
மகள் அருகே உள்ள கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மூதாட்டி ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அந்தப் பகுதியில் நெருக்கடியாக வீடுகள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு குழந்தை தெரசு வீட்டில் படுத்து உறங்கினார்.
பின்னர் புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் படுத்துள்ளார்.
பின்னர் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை கொலை செய்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், இரண்டு தோடு மற்றும் ஒரு மூக்குத்தி ஆகிய மூன்று பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இன்னொரு மூக்குத்தி அவரது மூக்கில் உள்ளது.
மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது பற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மோப்பநாய் கொலை நடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு அங்குள்ள கல்லறை மேட்டு பகுதியில் போய் நின்று விட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக மூதாட்டி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது






