மூதாட்டியை கழுத்தை அறுத்து கொன்று பணம்-நகை கொள்ளை: மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மூலம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
கொலை நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மூலம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஏழுபரன் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 65), விவசாயி. இவரது மனைவி அத்தாயம்மாள் (60). இவர்களுக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், மல்லிகா (35) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு சுப்ரமணி வீட்டிற்குள் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அத்தாயம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் மூதாட்டி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை சுப்ரமணி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பின்னர் கொலை செய்யப்பட்ட அத்தாயம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com