என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரை சேர்ந்தவர் சன்னியாசி, இவர் பா.ஜ.க. மாவட்ட வர்த்தக பிரிவு அணி செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து, அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இதனால் சுத்தமல்லியில் உள்ள வீட்டில் அவரது மாமனார் மாரி, மாமியார் ஆண்டிச்சி (வயது 70) ஆகியோர் மட்டும் வசித்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதி காலையில் வீட்டில் ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஆண்டிச்சியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது கை, கால்களை கயிறு மூலம் கட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என சுமார் 15 பவுன் நகைகளை பறித்தனர். தொடர்ந்து பீரோவை திறந்து அதில் இருந்த 10 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
நவீன தொழில்நுட்ப வசதியுடன் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று பேட்டை அண்ணாமலை நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான ஜீவா நகரை சேர்ந்த சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த நகைகளை, புத்திசாலித்தனமாக செயல்களை செய்வது போல் சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர், அந்த திருட்டு நகைகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு கும்பலை திறம்பட கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் பாராட்டினார்.






