என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி- செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
- உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- செல்லதுரையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 1-வது வார்டு கருக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 95).
கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் ராஜம்மாள் வசித்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் பழனியம்மாள் கடந்த சில வருடங்களாக உடனிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீடு அருகே உள்ள அய்யனாரப்பன் கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சென்ற மூதாட்டி ராஜம்மாள் தனது பேரன்-பேத்திகள், உறவினர்களுடன் இருந்துவிட்டு மாலையில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 7 மணி அளவில் தனது வீட்டில் உள்ள கட்டிலில் ராஜம்மாள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து மகள் பழனியம்மாள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
மூதாட்டி இறந்த செய்தி அறிந்து உறவினர்கள் வீட்டிற்கு திரண்டனர். ராஜம்மாளின் மகன் வழி பேரன்களான சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன் ஆகியோர் மூதாட்டியின் தலையில் 2 இடங்களில் பலத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உறவினர்கள் மூதாட்டி உடலை அடக்கம் செய்யும் வேலையில் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், அடக்கம் செய்யும் வேலைகளை தடுத்து நிறுத்தி ராஜம்மாளின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மூதாட்டி ராஜம்மாள் தவறி விழுந்து தானாக இறந்தாரா? அல்லது சொத்துக்காக யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜம்மாளை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
செல்லான் என்கிற செல்லதுரை (55) என்பவர் குடிபோதையில் சம்பவத்தன்று ராஜம்மாள் வீட்டிற்கு சென்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதை கண்ட ராஜம்மாள் செல்லதுரையை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை தோசை கரண்டியால் ராஜம்மாளின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு ரத்த கரைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சென்றுள்ளார். பின்னர் தனது செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு சென்றதால் போலீசாரின் பிடியில் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் போலீசாருக்கு முக்கிய தடயமாக கொலையாளியின் செருப்பு இருந்தது. இந்த செருப்பை வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை எளிதாக கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து செல்லான் என்கிற செல்லதுரையை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






