என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாக்டர் வீட்டில் 158 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
- தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (45). இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 158 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளாக தர்மபுரியை சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் என 5 பேர் கும்பல் என தெரியவந்தது. இதில் சுரேஷ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






