search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman murder"

    • பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அருகே உள்ள கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50).

    தி.மு.க. நிர்வாகியான இவர் கோ.புளியம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி (40). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி தனியாக வசித்து வரும் நிலையில், திருப்பதி மற்றும் வசந்தி ஆகியோர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் கதவை லேசாக சாத்திவிட்டு இருவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதி வீட்டில் மர்ம கும்பல் புகுந்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று திருப்பதி கேட்டு வந்தார்.

    இன்று அந்த வழிக்கான பத்திர பதிவு நடக்க இருந்தது. இந்த நிலையில் இன்று மர்ம கும்பல் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரையும் திட்டமிட்டு வெட்டியுள்ள சம்பவம், அந்த நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வசந்தி நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், ஐயாபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி(வயது 45). அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். இவர் காலையில் வீடுகள் முன்பு கோலம் போடுவது வழக்கம். அதே பகுதியில் தனலட்சுமியின் அக்காள் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கும் தனலட்சுமி கோலம்போட்டு வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 5.30 மணியளவில் தனலட்சுமி வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்து விட்டு அக்காள் வீட்டு முன்பு கோலம்போட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியின் கணவர் காளிமுத்து வந்தார். ஏற்கனவே செல்விக்கும், காளிமுத்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததால் தனலட்சுமி அவரை கண்டித்தார். இதனால் தனலட்சுமிக்கும், காளிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி சரிந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த போது தனலட்சுமி உயிருக்கு போராடிய படி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதில் குடும்ப தகராறில் காளிமுத்து தனது மனைவி செல்வியை தீர்த்து கட்ட வந்து இருந்த நிலையில் தனலட்சுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருப்பூரை சேர்ந்த காளிமுத்துவும், கொலையுண்ட தனலட்சுமியின் அக்காள் மகளான செல்வியும் பேஸ்புக் மூலம் காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காளிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    திருப்பூரில் இருந்தபோது செல்வி மீது காளி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து திருவொற்றியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    எனினும் காளிமுத்து தொடர்ந்து இங்கு வந்து மனைவியுடன் மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மனைவி செல்வியை தீர்த்து கட்ட கத்தியுடன் அவரது வீட்டின் அருகே நோட்டமிட்டு சுற்றி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை செல்வியுடன் மோதலில் ஈடுபட காளிமுத்து வந்த போது அங்கு வீட்டு வாசலில் கோலமிட்ட தனலட்சுமி அவரை தடுத்து "இங்கே நீ ஏன் வருகிறாய்" என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    தலைமறைவான கொலையாளி காளி முத்துவை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வீட்டு வாசலில் கோலமிட்ட பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி ராஜன் என்கிற வாலிபர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கலையரசி என்கிற பெண், பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, ஜோதிடர் ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாததால், தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.

    ஆனால் அவர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    • முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இங்கிலாந்து மில்டன் கெய்ன்ஸ் பிளெட்ச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புகுந்த 49 வயது மதிக்கத்தக்கவர் திடீரென கத்திக்குத்தில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வசித்து வந்த 38 வயது மற்றும் 24 வயதுடைய பெண்களை அவர் கத்தியால் குத்திக்கொன்றார். மேலும் சிலரையும் வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.

    இதில் 20 வயது வாலிபர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் ஏன் 2 பெண்களை குத்திக்கொன்றார் என தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளது.
    • பெண்ணின் தாயாரை வரவழைத்து கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    ராஞ்சி:

    திருமணம் செய்யாமல் 'லிவ்-இன்' உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்குள்ள குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பி உள்ளார்.

    திருமணமான இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் தனது திருமணத்தை மறைத்து அந்த பெணணுடன் பழகி வந்த அவர் தனியாக அந்த பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 8-ந்தேதி அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணை ஜோர்டாக் கிராமத்தில் தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார்.

    இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கற்பழித்த நரேஷ் பெங்ங்ரா, அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளது. அவற்றை நாய்கள் கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்ததை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து பெண்ணின் தாயாரை வரவழைத்து கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதில் அந்த பெண் நரேஷ் பெங்ராவுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்ததும், சம்பவத்தன்று நரேஷ் பெங்ராவுடன் குடித்தனம் நடத்த போவதாக கூறி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நரேஷ் பெங்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.
    • தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது 2-வது மனைவி சரண்யா (29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்த போது. இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார்.

    அப்போது சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகளை காணவில்லை எனபுகார் அளித்தார்.

    மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. திருவண்ணாமலை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கோபியை கைது செய்தனர். கணவன் மனைவி இடையே சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கோபி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.

    பின்னர் இது குறித்து அவருடைய தாயார் சிவகாமியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர்.

    பின்னர் இது குறித்து கோபி தன்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்தார்.

    அவருடைய காரில் 3 பேரும் சரண்யாவின் உடல் பாகங்களை பையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிக்கு சென்றனர்.

    8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர். தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன. மீதி உள்ள கை கால்கள் உள்ளிட்ட 5 பாகங்கள் கிடைக்கவில்லை.

    அவற்றை கைப்பற்ற போலீசார் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோபியின் தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு.
    • வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    வடமாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த் தாஸ் இவருக்கும் மகாலட்சுமி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் கர்நாடக மாநிலம் நெலமங்களா பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து மகாலட்சுமி பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள விநாயகர் நகர் பைப் லைன் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இவர் இங்கிருந்து பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வேலை பார்த்து வந்தார். இவரை தினமும் ஒரு வாலிபர் வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போனுக்கு உறவினர்கள், நண்பர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி நெலமங்காலவில் இருந்து மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு நேற்று வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து அவர்கள் பக்கத்து வீட்டினரிடம் கேட்டபோது மகாலட்சுமி நடமாட்டம் வெளியே இல்லை என்றும். அவரது விட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து மகாலட்சுமியின் சகோதரி வயாலிகாவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் மகாலட்சுமியை போலீசார் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உடல் பாகங்ககளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    இதற்கிடையே மகாலட்சுமியை தினமும் வேலைக்கு அழைத்து சென்று வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் யார்? என்றும் அவரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த மகாலட்சுமி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை தினமும் ஆண் நண்பர் ஒருவர் வேலைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதியிலிருந்து மகாலட்சுமி வெளியே வரவில்லை. மேலும் அந்த நபரும் காணவில்லை எனவே காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன விவகாரம் என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அவர் யாரிடம் பேசினார். எவ்வளவு நேரம் பேசினார். அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு பேசியது யார்? என்றும் விசாரணை நடக்கிறது.

    மேலும் மகாலட்சுமி வீட்டிற்கு வந்து சென்ற வாலிபரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாலட்சுமியை கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் உடல் பாகங்கள் அழுகி புழு வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ரெப்ரிஜிரேட்டரில் மனித உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது
    • அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் தெரிவித்தனர்

    பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய நிலையில் வீட்டில் ஆன் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த 165 லிட்டர் சிங்கிள் டோர் ரெப்ரிஜிரேட்டரில் மனித உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது. அது அந்த 1 பிஹெச்கே வீட்டில் வசித்து வந்த 29 வயது பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது. அந்த  பெண் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் பெங்களூரில் வீடு எடுத்து மால் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள் பாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்துக்கு (FSL) சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு தூண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • கொலை சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் அருகே திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் சின்னம நாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல் பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இதில் கறிக்கடை செயல்பட்டு வந்தது.

    தற்போது இங்கு கடை இன்றி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இன்று காலை இந்த கொட்டகையின் உள்ளே பெண் பிணம் கிடப்பதாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு பிணமாக கிடந்த பெண் தலையில் அடிபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    யாரோ மர்ம நபர் அவரை தலையின் பின் பகுதியில் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை அலங்கோலமாக போட்டு விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதி புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாயி என்பது தெரியவந்தது. இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வந்தார்.

    இதையடுத்து போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    நேற்று இரவு முத்தாயியுடன் அவருடன் பணிபுரியும் நபர் வண்டி சாவி காணவில்லை என மது போதையில் சண்டையிட்டதாக தெரிகிறது.

    இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்தாயி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    இந்த கொலை சம்பவம் கரூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை செய்த நபரின் பெயர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 22 வயது மதிக்கத்தக்க பீகார் பெண்ணைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பீகாரைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி என்கிற 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவர் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் பெண்கள் விடுதியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் கிருத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி அறையில் தங்கியிருக்கும் தோழியின் காதலன். அவர் வேலையில்லாமல் இருப்பதால் அடிக்கடி கிருத்தியின் தோழிக்கும் அவருக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

    இந்த சண்டையில் கிருத்தி குமாரி பெரும்பாலும் தலையிட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த நபரிடம் இருந்து தோழியை விலகி இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார் கிருத்தி. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கிருத்தியை கொலை செய்துள்ளார்" என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கொடூர கொலை சம்பவம் விடுதி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இந்த காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் கிருத்தி இருந்த அறையின் கதவைத் தட்டுகிறார். வெளியே வந்த கிருத்தியின் தலை முடியைப் பிடித்து, அவரை சுவரில் தள்ளி கத்தியால் பலமுறை கழுத்தில் குத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த சக அறை பெண்கள் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். குற்றவாளியை பிடிக்க பெங்களூரு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபரின் பெயர் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க பெங்களூருவில் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (38), இவர் தனது தந்தையின் சகோதரி மகளான அயோத்தியாப்பட்டனம் ராம் நகரை சேர்ந்த இந்துமதி (27) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் வேல்முருகன் (12) என்ற மகன் உள்ளார்.

    திருமணம் முடிந்ததில் இருந்தே இந்து மதி அயோத்தியாப்பட்டணம் ராம்நகரில் தனக்கு தாய் கொடுத்த வீட்டில் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். 2 பேரும் கட்டிட கொத்து வேலைக்கு சென்று வந்தனர். இதற்கிடையே குடிப்பழக்கம் உள்ள சுரேசுக்கும், அவரது மனைவி இந்து மதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது . இதனால் கடந்த 8 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ் , இந்து மதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். நேற்றிரவு சுரேஷ் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் இன்று காலையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் இந்துமதியை வயிறு உள்பட பல பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த இந்துமதி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையே அஙகு வந்த காரிப்பட்டி போலீசாரும், அந்த பகுதியினரும் சேர்ந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.

    கொலை செய்யப்பட்ட இந்து மதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது. இதையொட்டி அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், மனைவியின் மீதான நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.
    • கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). பெயிண்டர்.

    இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு ஹரிணி (9), சிவானி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். தங்கராஜ், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதேபோல் சம்பவத்தன்று இரவும் தங்கராஜ் குடிபோதையில் வந்து மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார்.

    மறுநாள் காலையில் புஷ்பா மற்றும் அவரது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தனர்.

    இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் தங்க ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்த நான் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டேன். இதைப்பார்த்து எனது மனைவி, 2-வது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். அதன்பேரில் தங்கராஜ் மீது போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விசாரணையின் போது தங்கராஜ் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் தங்கராஜே தண்ணீர் தொட்டியில் தள்ளி அவர்களை மூச்சு திணறடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தே கிக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் குதித்த புஷ்பா, மூடியை மேலே தள்ளி விட்டு வெளியே வந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடிபோதையில் இருந்த தங்கராஜ், மூடியை திறக்க முடியாதவாறு தடுத்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் பிரேத பரிசோதனை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது. அதன் முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும்.

    பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவரும். அதன்பிறகே தங்கராஜ் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரும் கொல்லப்பட்டது உறுதியாகும்பட்சத்தில் தங்கராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என போலீசார் தெரிவித்தனர்.

    கைதான தங்கராஜ் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நஞ்சுண்டாபுரத்தில் அவர்களின் இறுதிச்சடங்குகள் நடந்தன.

    ×