ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள் வீடியோவில் கதறல்- விரைந்து மீட்க வலியுறுத்தல்

ஈரான் நாட்டிற்கு மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தோம். காலையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தில் தான் இரவு தூங்க செல்கிறோம்.
ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள் வீடியோவில் கதறல்- விரைந்து மீட்க வலியுறுத்தல்
Published on

நாகர்கோவில்:

ஈரானில் போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் வளைகுடா நாடுகளுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட மீனவர்களும் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.

மீனவர்களை மீட்க வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் சமூகவலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மீனவர்கள் கூறியிருப்பதாவது:-

ஈரான் நாட்டிற்கு மீன்பிடிப்பதற்காக சென்றிருந்தோம். தற்போது போர் நடந்து வருவதால் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். நாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகே தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தில் தான் இரவு தூங்க செல்கிறோம்.

இரவு காற்றடித்து கதவு அடித்தால் கூட குண்டு போட்டு விட்டார்களோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செல்போனில் உள்ள டவர்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அனுப்பக்கூடிய கடைசி வீடியோவாக கூட இது இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com