search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல்"

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்
    • நாமக்கல் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்றார்

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

    அப்போது பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் என்று சொல்வதற்கு பதிலாக ரங்கராஜன் என்று ராஜ்நாத் சிங் கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த கே.பி.ராமலிங்கம் தனது பெயர் ரங்கராஜன் கிடையாது ராமலிங்கம் என கூறினார். பின்பு கே.பி.ராமலிங்கதிற்கு வாக்களியுங்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது.
    • தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது.

    நாமக்கல்:Namakkal District News,

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.

    மலைக்கோட்டையின் கீழ்ப் பகுதியில் குளம் மற்றும் பூங்கா உள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில், குளம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்க தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் மலைக்கோட்டைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகம் இருக்கும்.

    அவ்வாறு வரும் மக்கள் மலைக்கோட்டைக்கு சென்று பழமை வாய்ந்த திப்புசுல்தான் கோட்டை, ஆயுதக் கிடங்கு, குளம், தானியக் கிடங்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு மகிழ்வர். இந்நிலையில், மலைக்கோட்டைக்கு மக்கள் அதிகளவில் வந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதவது:-

    மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் அத்துறை சார்பில் காவலர் ஒருவரை நியமித்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வந்தனர். சில ஆண்டுகளாக அங்கு காவலர் யாரும் இல்லை.இங்கு வருவோர் மலைக்கோட்டை சுவர் மீது எழுதுவது மற்றும் கற்களைக் கொண்டு தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அங்குக் காவல் பணிக்கு ஊழியரை நியமிக்க வேண்டும். அதுபோல குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு ,கேமரா வைக்க வேண்டும் என்றனர்.

    • தமிழ் புத்தாண்டையொட்டி ஒரே கல்லினால் உருவான நாமக்கல் சாள கிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • சாமிக்கு 1,008 வடை மலை அலங்காரம் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாள கிராம மலையின் மேற்குப்ப குதியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சாமி சாந்த சொரூபியாக எதிரில், ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோவிலில் உள்ள ஸ்ரீ நரசிம்மரையும், சால கிராம மலையையும் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பா லித்து வருகிறார்.

    தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தினசரி சாமிக்கு 1,008 வடை மலை அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு அபிசேகம் நடைபெறும். பின்னர் சுவாமிக்கு, வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.

    நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காலை 8 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து சுவா மிக்கு 500 கிலோ எடை கொண்ட பல்வேறு வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கட்டளைதாரரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயர்ன்வாம் திட்ட பகுதிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா குறித்து ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயன்வாம் திட்டம் பகுதி 2, திருமணிமுத்தாறு உபவடிநீர் பகுதி கிராமத்தில் உலக வங்கி குழு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஆய்வு விவசாயிகளுடன் செயல்பாடு, விதை, பண்ணை அமைத்தல், விதைப் பண்ணையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைகளின் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்குமாறு கூறினர்.

    தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளுக்கு பாசிப்பயறு கரு விதை சோளம் கே-12 கரு விதை நிலக்கடலை டி.எம். பி 14 கருவிதை உயிர் உரங்கள் உயிரியல் காரணிகள் ஆகிய இடுபொருட்கள் ஆய்வு குழுவினர் வழங்கினர்.

    கூட்டத்தில் போது வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ராஜகோபால், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பேபி கலா, வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி, வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    மத்திய பல்கலைக்–கழகங்கள்-44, மாநில பல்கலைக்–கழகங்கள்- 12, நிகர்நிலை பல்கலைக்– கழகங்கள்- 11, தனியார் பல்கலைக்கழகங்கள்-19 ஆகியவற்றில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 2022-2023 -ம் ஆண்டு முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி.) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ்-2 முடித்து உயர்படிப்புக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    இதனை தொடர்ந்து பொது பல்கலைக்கழக இளநிலை நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் 500 நகரங்களில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலையில் தாள்-1 தேர்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரையிலும், மாலையில் தாள்-2 தேர்வு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரையிலும் நடைபெற்றது. அதாவது தாள்-1 தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து தாள்-2 தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6.45 மணி வரை நடைபெற்றது.

    இன்று முதல் தொடர்ந்து பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜேடர்பாளையத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து மீனவர்களுக்கு விளக்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஜேடர்பாளையத்தில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் நடைபெற்றது. பயிற்சியை நாமக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் நாச்சிமுத்து தொடங்கிவைத்தார்.

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி முன்னிலை வகித்து வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

    சேலம், மேட்டூர் அரசு மீன் பண்ணை மேற்பார்வையாளர் ரவி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் உள்ள சாதகங்கள் குறித்து விளக்கினார்.

    சிறுநல்லிகோயில் கிராமத்தில் மீன்பண்ணை அமைத்து மீன்சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜு மீன்கள் வளர்க்க பண்ணைக்குட்டை அமைப்பது, கட்லா, ரோகு. மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை மற்றும் மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா ஆகிய பல்வேறு ரக மீன்களை ஒருங்கிணைத்த முறையில் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மீன்வளர்ப்பில் விவசாயிகளுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன குறித்து விழிப்புணர்வு விளக்கவுரை அளித்தார்.

    மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஹேமலதா, கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி ஆகியோர் பேசினர். பயிற்சியின் முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன், முன்னோடி விவசாயிகள் மாரியம்மன் படுகை பழனிசாமி, உழவன் விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், ரமேஷ்குமார் மற்றும் வடகரை ஆத்தூர் கிராம முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் முதியவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்டர் மீடியனில் கார் மோதி சாலையில் நடுவில் கவிழ்ந்தது.

    சேலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது மனைவி பரிமளா (65). இவர்களது மருமகன் பாலு (45). இவர் சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு தேவையான கிராணைட் கற்களை கிருஷ்ணகிரியில் வாங்க முடிவு செய்தார்.

    இதையடுத்து இன்று அதிகாலை சொந்த ஊரில் இருந்து ஒரு காரில் 3 பேரும் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் காண்டிராக்டர் தங்கவேல் என்பவரும் காரில் இருந்தார். காரை முருகனின் மருமகன் பாலு ஓட்டினார். இந்த கார் இன்று காலை 7 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த முருகன் காயம் அடைந்து கதறினார். மேலும் காருக்குள் சிக்கிய மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்களை மீட்க முயன்றனர். மேலும் அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் முருகன் மட்டும் பலத்த காயமடைந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து சாலையில் கிடந்த காரை அப்புறப்படுத்திய அன்னதானப்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்லில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கோழி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் 130 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேபோல 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரித்த கோழி 220 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து கறிக்கோழி சில்லறை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கேரளாவில் கனமழையால் கோழிப் பண்ணைகள் அழிந்ததால் கேரளாவிற்கு அதிகளவில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் புரட்டாசி விரதம் முடிந்ததாலும், தசரா பண்டிகைக்கு வெளி மாநிலத்திற்கு அதிக அளவில் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாலும் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. #ITRaid
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வட்டூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஆண்டிப் பாளையத்தில் கிறிஸ்டி கிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, ரேசன் கடைகளுக்கு பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் போலி கம்பெனிகள் மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி முதல் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, அவரது உறவினர் வீடுகள், மற்றும் ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள் உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, டெல்லி என மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பருப்பு, சத்து மாவு ஆகியவை சப்ளை செய்யப்படுகிறது. இக்கழகத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ள ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சுதாதேவி, குமாரசாமியின் உறவினர் ஆவார்.

    இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆண்டிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பட்டி ஆகும். இவர் பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்,

    இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 38 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று 3-வது நாளாக குமாரசாமி வீடு, நிறுவனம் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது. இன்று 4-வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.

    இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே முதல் நாள் நடந்த சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக நடந்த சோதனையில் பலகோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 17 கோடி ரொக்கப்பணமும், 10 கிலோ தங்க நகைகளும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு பணங்களும் அடங்கும். மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சத்துணவு திட்டத்திற்காக 2017-2018-ம் ஆண்டு 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக கிறிஸ்டி நிறுவனம் ஒரு முட்டை 434 காசு வீதம் 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இதில் சில முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் வரி ஏய்ப்பு, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த பண பரிமாற்றம் ஆகியவை பற்றிய முழு விவரம் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமியிடம் வருமான வரித்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அடுத்த வாரம் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    குமாரசாமி பல வங்கிகளில் ஏராளமான லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார். இந்த லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

    வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Eggnutritioncorruption
    ×