என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக வலுப்பெறும்.
- அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க. 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அ.தி.மு.க. அக்டோபர் 17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு, 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
அக்டோபர் 17-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுவார் என அ.தி.மு.க. தெரிவித்திருந்தது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் 17ம் தேதி நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
- ராணிப்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அந்த பகுதியில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதைத்தொடர்ந்து வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தொழிலாளர்களின் முக்கிய 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்தைகளை நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்யவேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால் சாம்சங் தொழிற்சாலையில் நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 123.7 மி மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.
இதனையொட்டி தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது .
இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் வழக்கத்தை விட 84% அதிகமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 123.7 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 67.3 மி மீ மழை தான் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2024
- திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதாலும், பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில்,
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில்
சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க. திட்டங்களை முழுமையாக தொடர்ந்து செயல்படுத்தவில்லை.
- இதனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும்.
எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, எங்களது ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் 3 நேரமும் தரமான உணவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுவதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனவே, உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்துகிறேன்.
ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை மற்றும் துணை முதலமைச்சராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.
மாறாக, எனது தலைமையிலான ஆட்சியில் 2020-ம் ஆண்டில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி, பொதுப்பணி மற்றும் அறநிலையத் துறைகளுக்குச் சொந்தமான குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டன. சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு ஓராண்டு தாமதத்திற்குப் பிறகே இந்தப் பராமரிப்புப் பணிகள் துவக்கப்பட்டன. இதனால்தான், கடந்த ஆண்டுகூட பருவமழையின்போது சென்னை வெள்ளத்தில் மிதந்தது.
இதேபோன்று, கூவம் மற்றும் அடையாற்றில் வெள்ள நீர் எளிதாக செல்வதற்கு, கரையோரங்களில் வசித்த சுமார் 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் புதிய குடியிருப்புகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர். 48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைக்காலங்களில் மக்களுக்கு சேவையாற்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை முழு அளவு பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சியில் துவக்கப்பட்டு, தொடர்ந்து இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் நிரந்தரத் தீர்வுக்காக அம்மாவின் ஆட்சியில் அடையாறு பேசின், கோவளம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக்கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டன.
இதன்மூலம் சென்னையில் உள்ள சுமார் 2,400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம், ஜெய்கா, ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணிகள் முடிக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டு, எங்களது ஆட்சிக் காலத்தில் சுமார் 1,240 கி.மீ. நீள வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன.
ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டங்களை முழுமையாகத் தொடர்ந்து செயல்படுத்தாததால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன.
2021-ம் ஆண்டு மழையின்போது குறிப்பாக, சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்தது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், 70 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சரும், 75 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சென்னை மாநகர மேயரும், 70 முதல் 80 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று தமிழக முதலமைச்சரும் உண்மைக்கு மாறாக பேட்டி அளித்து, மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை நடத்தினர்.
அதேபோல், 2022-ம் ஆண்டு நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் 1,200 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அவர்களின் கூற்றுப்படி 1,950 கிலோமீட்டருக்கு பணிகள் முழுமையாக முடிந்திருந்தால் பருவமழை தொடங்கிய ஒருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்காது.
கடந்த 41 மாத கால ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் முறையாகத் திட்டமிடாமல், கேபிள்கள் அமைப்பது, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என்று எங்கு திரும்பினாலும் சாலைகள் உடைக்கப்பட்டு, முச்சந்திகளிலும் பெரும் பள்ளம் (ஜங்ஷன் பாயிண்ட்) தோண்டப்பட்டு அவைகள் சரியாக மூடப்படாமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பல விபத்துக்களும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட சென்னை மயிலாப்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து மரணமடைந்ததை அனைவரும் அறிவார்கள். இத்தகைய நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசை தமிழ்நாட்டு மக்கள் இதுவரை கண்டதில்லை.
இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே, சென்னை தத்தளித்ததற்கு வெள்ள நீர் கால்வாய்கள் முழுமையாக தூர் வாராததே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.
20 செ.மீ. வரை மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று மாற்றி மாற்றி பேசிய ஸ்டாலினின் தி.மு.க. அரசின் அமைச்சர்கள், இன்று 4 மணி நேர மழைக்கே மக்கள் தத்தளிப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மழை வெள்ளத்தைத் தடுக்க திட்டமிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத, விளம்பர தி.மு.க. அரசினால் வீடுகளுக்குள் புகும் வெள்ள நீரால் டி.வி., ப்ரிட்ஜ், சோபா போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, மினி வேன் வாகனங்களை ஆதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள், தங்கள் வாகனங்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். பெருமழையின்போது பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இனியும் இந்த ஏமாற்று விளம்பர அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், குடிதண்ணீர், பால், தேவையான மருந்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். குறிப்பாக, குடிநீரை காய்ச்சிப் பருகவும் வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட
குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான தருணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை எப்போதும் போல் முன்னின்று செய்து, அவர்களின் துயர் துடைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்று வலிறுத்துகிறேன்.
ஸ்டாலினின் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
எனவே, ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவு களப்பணிகள் செய்யவேண்டும்.
- ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது என்றார்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.
சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயரத்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.
சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ. மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ. மழை பெய்தால் சென்னை என்னவாகும் என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன, 95 சதவீதம் முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.
உண்மையான அக்கறையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ. மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின்மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது.
மகிழுந்துகளை நிறுத்திவைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.
பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பதுதான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகாத்தனத்தை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர் என்பதுதான். தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும்.
- 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.
40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
மழை பேஞ்ச உடனே தண்ணி போயிடனும்னு நினைக்குறாங்க எவ்வளவு வளர்ந்த நாடாக இருந்தாலும் அது நடக்காது. pic.twitter.com/OsyL6WSSFn
— தூய துறவி (@VSK_Talks) October 14, 2024
- சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
- சேவைத்துறை தவிர பிற அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றும் வடதமிழகத்தில் கனமழை விடாமல் பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 4 மாவட்டங்களுக்கு சேவைத்துறை தவிர பிற அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
- அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
- சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.
சென்னை:
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.
அக்டோபர் 1 முதல் தற்போது வரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
- தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுப்பு.
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் பங்கேற்க இயலாது என முதல்வர் பதில்.
தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாது என்று அவரிடம் தெரிவித்த முதலமைச்சர் தி.மு.க. சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குள் கடந்த 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா 2-வது முறையாக அம்மாநில முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்