

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பிடிக்காததால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.-விடம் த.வெ.க. ஆதரவு கேட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.-வின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
113 எம்.எல்.ஏ.-க்கள ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநரை சந்தித்தார். நாளை அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதேவேளையில் நாளை பதவி ஏற்றால், 9-ந்தேதி (2 நாட்களுக்குள்) பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்ததாவது:-
விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இடது சாரி கட்சிகளுக்கும் அவ்வாறு அனுப்பியுள்ளதாக அறியப்பட்டுள்ளேன். இதுகுறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து இதுகுறித்து நிலைப்பாட்டை மேற்கொள்வோம்.
காங்கிரஸ் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்திருப்பது அந்த கட்சியின் தனிப்பட்ட சுதந்திரம். அதில் கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை. எதிர்கால அரசியல் தொடர்பாக இடது சாரி கட்சிகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். இதனால் அவர்களுடன் கலந்து ஆலோசிந்து முடிவு எடுக்கப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.
இதனால் இதுகுறித்து இடதுசாரி கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை முக்கியமான முடிவாக நான் பார்க்கிறேன். எங்கள் கட்சியின் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நாளை காலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.
இடது சாரிகள் கட்சிகளின் முடிவுகள் எதுவாக இருந்தாலும் கூட எங்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் முடிவு முக்கியமானது. பொறுப்பாளர்கள் முடிவின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகளுடன் பேசுவோம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு கடிதம் எழுதியதன் மூலம் அவர்கள் அதிமுக, பாமக-வை எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகிறது.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
கடிதம் அனுப்பிய த.வெ.க. தலைவர் விஜய் தங்களிடம் பேசினாரா? என்ற கேள்விக்கு, இதுகுறித்து நாளை சொல்கிறேன் எனப் பதில் அளித்தார்.