என் மலர்
திருநெல்வேலி
- இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
- 16-ந்தேதி திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றி திருப்பலி நடத்தினார். தொடர்ந்து நற்கருணை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது. 17-ந்தேதி கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி கலந்து கொள்கிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.
- பயிற்சி முகாமில் 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது.
நெல்லை:
தேசிய மாணவர் படையின் 3-வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் 4 மாவட்ட பள்ளி, கல்லூரி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் பாளையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது. இதில் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், கலை, சமூக செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வர்கள் மண்டல அளவி லான போட்டி களுக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர். அதில் தேர்வாகும் வீராங்கனைகள் குடியரசு தின விழா ஒத்திகைக்கு தகுதி பெறுவார்கள்.
இன்று நடந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
20 மீட்டர் அளவில் உள்ள இலக்கை 5 ரவுண்டுகள் சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் இலக்கை நோக்கி சுட்டு அசத்தினர். அதிக முறை இலக்கில் சரியாக சுட்ட மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
- அங்கக முறையில் பூச்சி, நோய் மேலாண்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர்.
- 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான 3 நாள் விவசாயிகள் பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கலந்துரையாடல்
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் இந்த பயிற்சி நடந்தது.
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அங்கக சான்றளிப்புத் துறை பேராசிரியர் சுகந்தி, அங்கக பண்ணையம் செய்வதன் தற்போதைய நோக்கம் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள், பசுந்தாள் உரங்கள், மூலிகை பூச்சி விரட்டி பஞ்சகாவ்யா, மீன் அமினோ அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரித்தல், ஊடுபயிர், பல வகைப்பயிர்கள், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை களைக்கொல்லி தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி, நோய் மேலான்மை குறி்த்து விவசாயிகள் இடையே கலந்துரையாடினர். அங்கக வேளாண் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கக வேளாண்மை
உதவி பேராசிரியர் சண்முக தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மா, கொய்யா, சப்போட்டா மற்றும் அங்கக வேளாண்மை செய்வதனால் கிடைக்கும் நிகர லாபம் மற்றும் அங்கக வேளாண் முறைகள் குறித்தும் அடர்நடவு முறை குறித்தும் பேசினார்.
வேளாண் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கஸ்தூரி ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதன் மூலம் விவசாயிகள் தினமும் பெறும் வருமானம், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிவளர்ப்பு, தீவனப்புல் உற்பத்தி, மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 3 நாள் நடைபெற்ற இப்பயிற்சியில் விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன் , பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் பணியாளர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் மொத்தமாக பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
அதிரடி சோதனை
இதையடுத்து கமிஷனர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் மாநகரப் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேஸ்திரி சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மனோஜ், முத்துராஜ், மாரியப்பன், சேக் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் டவுண் சத்தியமூர்த்தி தெரு, தெற்கு ரத வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 47 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகாதார அலுவலர் இளங்கோ 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலப்பாளையம்
அதேபோல் மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கர், பரப்புரையாளர்கள் கலை செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன் , மரிய பாக்கியம், எல் சி எப் பணியாளர்கள் வேல்முருகன், முகமது சபி ஆகிய குழுவினர் மேலப்பாளையம் நேருஜி ரோடு, நேதாஜி சாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலப்பாளையத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார்,ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பழக்கடையில் சோதனை நடைபெற்றது.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
- முகாமில் குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நாளை (10-ந் தேதி ) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.
மேலும் மனு அளிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, ஆதார், பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.
முகாம், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 93424 71314 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
- நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
திசையன்விளை:
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளாக திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே போர்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவித்து தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- போலீசார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
- விசாரணையில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
நெல்லை:
வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
- 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
- தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.
இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு புறப்பட்டு சென்றார்.
ரூ.1½ கோடி கொள்ளை
கார் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அருகே சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) செல்வி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரிடம் உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.