search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார்.

    திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்துகொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

    • வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).

    யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

    அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவு ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


    தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

    இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்

    பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.

    தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
    • சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35).

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சின்னமணிக்கும், அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).

    இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் , செல்வகுமார், ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணிக்கு மினிலாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பைபர் படகில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் பீடி இலைகள் கடத்தி செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை கைப்பற்றினர். லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.

    • வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார்.
    • தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 56). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டை விற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.

    வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.

    தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

    மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    ×