என் மலர்
நீங்கள் தேடியது "money robbery"
- கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
- காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 75). நிலக்கடலை வியாபாரி. இவரது மகன் ராஜா (45).
இவர் விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பின்னர் மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார்.
- வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது.
பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.
வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை சுருட்டி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை போன இடத்தில் பதிவாகி உள்ள கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில்வே அதிகாரி வீட்டுக்கு சமீபத்தில் யார்-யார் வந்து சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
- பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.
மதுரை:
மதுரை புதுவிளாங்குடி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கதிர்வேல். இவருடைய மகன் ஜெயேந்திரன் (வயது 40). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக இங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இவர் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள தனத குடும்பத்தினருடன் கடந்த 17-ந் தேதி சென்றுள்ளார். அங்கு தந்தை வீட்டில் தங்கிவிட்டு கடந்த 21-ந் தேதி காலை மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அறையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் சமீபத்தில் அவரது சொத்துகளை விற்று வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது. அந்த பணம் அவரது மகனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஜெயேந்திரன், செல்லூரில் உள்ள தன் நண்பர் உபேந்திரனிடம் தெரிவித்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசில் புகார் அளித்தார். கொள்ளை நடந்த இடம் கூடல்புதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருவதால் அங்கு விசாரணை நடத்தப்பட்டது.
கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்தார். அதில் ஜெயேந்திரன் வீட்டில் பணம் இருந்ததை அறிந்த சிலர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் ஒரு மர்ம கார் சென்றதை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் பற்றி விசாரித்தபோது ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய முக்கிய நபர்களான மதுரை கே.கே.நகரை சேர்ந்த பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த விவேகானந்த் (34), திருப்பாலையை சேர்ந்த யோகேஷ் (36), பொதும்பை சேர்ந்த சுரேஷ் (49) ஆகிய 4 பேரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து பல லட்ச ரூபாயை போலீசார் மீட்டனர்.
மேலும் பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகார்ஜூன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்.
இந்த வழக்கில் பணத்தை பறிகொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் போலீசில் பல லட்சம்தான் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கைது செய்யப்பட்டவரில் சுரேஷ் என்பவர், அந்த முன்னாள் அமைச்சரிடம் ஏற்கனவே டிரைவராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
- நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
- கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தளி:
கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன் (வயது41). இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வந்தார்.
பண்ணையில் காரை நிறுத்தி விட்டு, அங்குள்ள தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசியவாறு சம்பளம் கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றார்.
ஆனால், காரில் பணத்தை காணவில்லை. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் முகமது யூசுப் (49) என்பவரும் மாயமாகி இருந்தார். அவர், பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்க துரை உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஆனந்தராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், தலைமை காவலர்கள் ரஞ்சித்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரு சென்று விசாரித்ததில் முகமது யூசுப் குறித்து பகீர் தகவல் வெளியானது. சிவமொக்கா, உடுப்பி, சித்ரரதுர்கா ஆகிய பகுதியில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றி கொடுத்து செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து அவர்களின் நன்மதிப்பை பெற்று சில மாதங்களில் சந்தர்ப்பம் பார்த்து மொத்தமாக ஒரு தொகையை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
முரளிமோகனிடம் திருடிய பணத்துடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை 3 மாதமாக தனிப்படை போலீசார் கண்காணித்து மும்பை வரை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில், மைசூருவில் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிய வந்தது. அங்கு, சரக்குவேன் ஓட்டி வந்ததை நோட்டமிட்ட தனிப்படை போலீசார் முகமது யூசுப் (எ)ஷேக் முகமது யூசூப்பை நேற்று கைது செய்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடமிருந்து முகவரி, செல்போன் எண்கள், போட்டோ அடையாளத்தை மாற்றி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.
தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் வேலைக்கு சேரும் ஷேக் முகமதுயூசூப் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொண்டு நற்பெயர் ஏற்படுத்தி கொள்வார். சமயம் பார்த்து வேலை செய்யும் இடத்தில் அதிக பணம் கிடைக்கும்போது சுருட்டிக்கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடிப்பதும், அங்கு அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
பணம் செலவானதும், மீண்டும் வந்து ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி, போட்டோ, செல்போன் எண்களை மாற்றி வேறு பகுதியில் செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து கைவரிசை காட்டுவதுமாக இருந்துள்ளார். இவர் மீது கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஷேக் முகமது யூருப்பை தேன் கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மும்பை வரை தேடிச்சென்று குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.
அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.
மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.
இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜா (வயது60). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மருமகன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு ராஜா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென மர்ம நபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர்.
அப்போது ராஜா வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கோவிந்தம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து உடனே தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை கழட்டி கொடுத்தார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்களை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் முதிய தம்பதியரை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர்.
- விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் பழனிவேல். விவசாயி. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் பழனிேவல் இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
வழக்கம்போல் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை, வெள்ளி டம்ளர், குத்து விளக்கு உள்ளிட்ட 1 கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆத்தூர் நகர போலீசில் பழனிவேல் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.
ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39).
- ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலம் புதுக்காலனியில் வசித்து வருபவர் ரகுவரன். இவரது மனைவி ரேவதி (வயது 39). இவர் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ரகுவரன்-ரேவதி இருவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் ரகுவரன்-ரேவதி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ், வீடு திறந்திருந்ததை பார்த்து ரேவதிக்கு செல்போனில் தகவல் அளித்தார். அதனைத்தொடர்ந்து ரேவதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புடவைக்கு அடியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ரேவதி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
- 2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி நகர் பாரதிபுரம் நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் எதிரே பிரபல டி.வி. ஷோரூம் உள்ளது. கடந்த மாதம் தான் புதிதாக திறக்கப்பட்டது. இங்கு சுமார் 35 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு ஷோரூமை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை 9.45 மணியளவில் கடையை கணக்காளர் திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டரை கடப்பாறை மூலம் நெம்பி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.63 ஆயிரத்து 700 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இந்த கடையின் அருகில் உள்ள மற்றொரு எலக்ட்ரானிக்கல் கடையிலும் ஷட்டரை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை.
2 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டனர். கடையில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் 2 இடங்களிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் உபகரணங்களை திருடிச்சென்று விட்டனர். எனவே அதில் பதிவான காட்சிகளை காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நகரின் முக்கியமான இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
- மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
திருச்சி,
திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது உள்ளது. இங்கு போஸ்ட் மாஸ்டராக சுனந்தா(51) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலை வந்து பார்த்தபொழுது போஸ்ட் ஆபீஸின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாலக்கரை காவல் நிலையத்தில் அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் போஸ்ட் ஆபீஸில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுவர் ஏறி குதித்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
நேற்று இரவு அங்கு பைக்கில் வந்த 3 பேர் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வழக்கும் போல் கேட்டை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர் உண்டியல் உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.
நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பைக்கில் வந்து சுவர் ஏறி குறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொள்ளையில் அதே நபர்கள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.






