என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பண்ணை வீடு உரிமையாளரிடம் கொள்ளையடித்த பணத்தில் மும்பை அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்த டிரைவர்
- நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
- கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தளி:
கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளிமோகன் (வயது41). இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்தில் உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக காரில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வந்தார்.
பண்ணையில் காரை நிறுத்தி விட்டு, அங்குள்ள தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசியவாறு சம்பளம் கொடுப்பதற்காக காரில் வைத்திருந்த பணத்தை எடுக்க சென்றார்.
ஆனால், காரில் பணத்தை காணவில்லை. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் முகமது யூசுப் (49) என்பவரும் மாயமாகி இருந்தார். அவர், பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கார் டிரைவரை வேலைக்கு சேர்த்திருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்க துரை உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஆனந்தராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், தலைமை காவலர்கள் ரஞ்சித்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரு சென்று விசாரித்ததில் முகமது யூசுப் குறித்து பகீர் தகவல் வெளியானது. சிவமொக்கா, உடுப்பி, சித்ரரதுர்கா ஆகிய பகுதியில் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றி கொடுத்து செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து அவர்களின் நன்மதிப்பை பெற்று சில மாதங்களில் சந்தர்ப்பம் பார்த்து மொத்தமாக ஒரு தொகையை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
முரளிமோகனிடம் திருடிய பணத்துடன் மும்பைக்கு ஓட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை 3 மாதமாக தனிப்படை போலீசார் கண்காணித்து மும்பை வரை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில், மைசூருவில் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருப்பது தெரிய வந்தது. அங்கு, சரக்குவேன் ஓட்டி வந்ததை நோட்டமிட்ட தனிப்படை போலீசார் முகமது யூசுப் (எ)ஷேக் முகமது யூசூப்பை நேற்று கைது செய்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடமிருந்து முகவரி, செல்போன் எண்கள், போட்டோ அடையாளத்தை மாற்றி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.
தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் வேலைக்கு சேரும் ஷேக் முகமதுயூசூப் நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடந்து கொண்டு நற்பெயர் ஏற்படுத்தி கொள்வார். சமயம் பார்த்து வேலை செய்யும் இடத்தில் அதிக பணம் கிடைக்கும்போது சுருட்டிக்கொண்டு மும்பைக்கு ஓட்டம் பிடிப்பதும், அங்கு அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
பணம் செலவானதும், மீண்டும் வந்து ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி, போட்டோ, செல்போன் எண்களை மாற்றி வேறு பகுதியில் செல்வந்தர்களிடம் வேலைக்கு சேர்ந்து கைவரிசை காட்டுவதுமாக இருந்துள்ளார். இவர் மீது கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
கடைசியாக முரளி மோகனிடம் கைவரிசை காட்டிய புகாரின்பேரில் சிக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஷேக் முகமது யூருப்பை தேன் கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மும்பை வரை தேடிச்சென்று குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.






