என் மலர்
நீங்கள் தேடியது "Gold Robbery"
- மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
- நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி மேலாளர் கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் சென்றார்.
பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் நேற்று இரவு 3 ஊழியர்களுடன் சென்னை திரும்பினர்.
திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
- காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 75). நிலக்கடலை வியாபாரி. இவரது மகன் ராஜா (45).
இவர் விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு ராஜா வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் காசிலிங்கம் வீட்டின் மேல் தளத்தில் அமைந்துள்ள ராஜாவின் வீட்டிற்கு சென்று விளக்கை ஏற்றி விட்டு கீழே வந்து இரவு தூங்கியுள்ளார். பின்னர் மீண்டும் இன்று காலை விளக்கை அணைப்பதற்காக சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீடிற்குள் இருந்த பீரோ உடைப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 152 பவுன் நகை, ரூ.30 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து காசிலிங்கம் உடனடியாக காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிறப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி வந்தனர்.
- சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கலபுரகி சரப்பஜார் பகுதியில் ஜெய்பவானி என்ற வணிக வளாகம் உள்ளது. இதன் முதல் தளத்தில் ஒரு நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதியம் 12 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தப்படி வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென நகை கடை உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கடையில் இருந்து சுமார் 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். இதையடுத்து கடையின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் ஷரணப்பா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த நகை கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் மதியம் 12 மணி முதல் 12.45 மணிவரை கடையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் முகமூடி அணிந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களின் உருவம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடையில் 1300 கிராம் தங்க நகைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பிரம்மபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
- கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் வசித்து வருபவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்காக கேசரி வர்மன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அவர் தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த சுமார் 200 பவுன் நகைகளை எடுத்து பீரோவில் வைத்திருந்தார்.
தனது மகள் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைப்பதற்காக கேசரி வர்மன் தனது மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
நேற்று நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் முனியன், பொன்னம்மாள் மற்றும் கேசரி வர்மன் உறவினர்களை ஒரு அறையில் கட்டிப் போட்டனர்.
பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோ மற்றும் பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகைளை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இன்று காலை மீட்டனர். இந்த கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன
- நகை திருட்டு தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை:
காசிமேடு, ஒய்.எம்.சி.ஏ. குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். நேற்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மாடியில் குடும்பத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
- தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்பெங்களூரு சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் 5 கிலோ கொள்ளை சம்பவம் நடந்தது. கோவையை சேர்ந்த பிரசன்னா என்பவர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தி்ல் தங்க நகைகள் காருடன் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த தகவலின் பேரி்ல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதில் கோவை ராஜவீதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு பெங்களூரில் 5 கிலோ தங்க நகைகள் வாங்கி கொண்டு கார் ஒன்றில் தருமபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தபோது, காரிமங்கலம் அருகே பூலாப்பட்டி மேம்பாலம் அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தங்கம் எடுத்து வந்தவர்களை தாக்கி விட்டு காருடன் தங்கத்தை கடத்தி சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த 4 பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.
இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரி்ல் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரைண நடந்து வருகிறது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்று தருமபுரி-சென்னை ரோட்டில் திப்பப்பட்டி அடுத்த கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையிலுள்ள அத்திப்பள்ளி சுங்கச்சாடி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளில், தங்கம் எடுத்து வரப்பட்ட கார் கடத்தலில் ஈடுபட்டவர்களின் கார் பதிவெண்களின் விபரம் எதாவது கிடைக்கிறதா? என்பது குறித்தும் காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களில் கார்கள் பயணித்தது பதிவாகியிருக்கிறதா? என்பதும் குறித்தும் தனிப்படை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்ட எஸ்.பிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
- விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை.
- இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தார்.
விருதுநகரில் சிமெண்ட் ஆலையின் துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிமெண்ட் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் துணை பொது மேலாளர்கள் பால முருகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இருவரும் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த நிலையில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வளாகத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
- போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் யூசுப் தனது சகோதரருடன் நகைக்கடையை மூடிவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் இருவரையும் தாக்கி, பைக்கில் வைத்திருந்த 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன், விஜின், சதீசன், நிகில் ஆகியோரிடம் தங்கம் இல்லாததால் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
- அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.
திருச்சி :
திருச்சி ஏர்போர்ட் அன்பு நகர், அன்பில் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்திஷ் (வயது 29). இவர் திருச்சியில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது வழக்கம். இவரது வீட்டின் அருகில் இவரது தாத்தா சுப்பிரமணியன் (65) ஓய்வு பெற்ற ரயில்வே பரிசோதனராக பணிபுரிந்து வந்தவரின் வீடு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மாலை சுமார் 5 மணியளவில் நித்திஷின் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாத்தா சுப்பிரமணியன், வீட்டின் உள் நுழைவதற்கு முற்பட்டபோது, அவர்களது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து ஓடினர்.
வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதி வுகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள ரோஜா வீதியை சேர்ந்தவர் வீரபாண்டி.இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது30), இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் மதுரையில் இருந்து பஸ்சில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று காலை லட்சுமி பிரபா எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டார். புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று லட்சுமி பிரபாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.
இதுகுறித்து புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.
கொருக்குப்பேட்டை உள்ளார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வரும் இவர் வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் வீட்டில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்ஸ்ராஜ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரையும் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ரெயிலில் செல்வது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார், ஆந்திர ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்ற நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதை தெரிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில் அங்கு வந்ததும் அதில் இருந்து இறங்கிய அன்ஸ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்கமும் 120 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்ஸ்ராஜுடன் இருந்த அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
இதுபற்றி சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் அன்ஸ்ராஜை பிடிப்பதற்காக விஜயவாடா விரைந்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #GoldRobbery






