என் மலர்
நீங்கள் தேடியது "woman murdered"
- அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
- அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சந்திரபூர்:
மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). இவர் மதுபோதைக்கு அடிமையானவர்.
இதன் காரணமாக அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஜெகதீஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் இரவு ஜெகதீஷ் மதுபோதையில் வீடு திரும்பினார். அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் தனது தாய் என்றும் பாராமல் கொடூரமாக கையால் அடித்து தாக்கினார். இதில் சுமித்ரா பெட்குலே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஜெகதீஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்து, தனது தாயைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அவர் போதையில் இருந்ததால் முதலில் அவரை நம்பாத கிராம மக்கள் பின்னர் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைதொடர்ந்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். சுமித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது.
- பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவி லுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன் மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது. பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவரை பிரிந்துவிட்டார். மீண்டும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.
இந்நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் கயல்விழியை காதல் கண்ணோட்டத்தில் மாயாண்டி ராஜா நெருங்கி உள்ளார். ஆனால் கயல்விழி அதற்கு உடன்படவில்லை. இதனால் அவரிடம் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக கூறி நம்பவைத்து பல்வேறு தவணைகளாக கயல்விழியிடம் மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டிராஜா ஆகியோர் பறித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்து சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீரவ நல்லூரை சேர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்துச் சென்று சேரன்மாதேவியை அடுத்த கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
- கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
- ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
வேலூர்:
வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.
இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.
பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.
வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .
இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.
சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.
கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.
போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.
- சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொலை செய்து வீசப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து குணப்பிரியாவின் உடலை அடையாளம் காட்டினர்.
வேலூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கார்த்தி (வயது22) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார்த்தி குணப்பிரியாவை அடித்துக் கொன்று மலையில் இருந்து தள்ளியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் இன்ஸ்ட்ரா கிராமில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை காதல் திருமணம் செய்தேன். எனது வீட்டில் எங்களை சேர்க்கவில்லை. இதனால் வேலூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம்.
மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தேன்.
குணப்பிரியா 7 மாத கர்ப்பிணியானார். நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த மாதம் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 25-ந்தேதி வேலூர் வந்தார். அவரை பாலமதி மலைக்கு அழைத்து சென்றேன்.
வேலூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து நாம் குடியேறலாம் என குணப்பிரியா தெரிவித்தார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் குணப்பிரியா இறந்து விட்டார். பின்னர் மலையில் இருந்து தள்ளி விட்டு வந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி.
- சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.
ஐதராபாத்:
டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது.
அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே வீசினார்.
இந்த கொலையை நினைவுபடுத்தும்வகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்குள்ள முசி ஆற்றங்கரையில் நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் தலை கைப்பற்றப்பட்டது.
அவர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தும், காணாமல் போனவர்கள் பட்டியலை ஒப்பிட்டும் கொலையாளியை நெருங்கினர்.
அவர் பெயர் சந்திரமோகன் (வயது 48). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஐதராபாத்தில் சைதன்யபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி (55). வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் பணியாற்றி வந்தார். சைதன்யபுரியில், சந்திரமோகனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது திடுக்கிட்டனர். அனுராதா ரெட்டியின் தலையற்ற உடல், பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. அப்புறப்படுத்த தயார்நிலையில் இருப்பது தெரிய வந்தது.
அனுராதா ரெட்டியின் துண்டிக்கப்பட்ட 2 கால்கள், 2 கைகள் ஆகியவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தன. வாசனை திரவிய பாட்டில்கள், பினாயில், டெட்டால், கல் உடைக்கும் கருவி ஆகியவையும் பிரிட்ஜில் இருந்தன.
கைதான சந்திரமோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ் கூறியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதா ரெட்டியிடம் சிறிது சிறிதாக ரூ.7 லட்சம்வரை சந்திரமோகன் கடன் வாங்கி இருந்தார். அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
அந்த பணத்தை திருப்பித்தருமாறு அனுராதா ரெட்டி வற்புறுத்தி வந்தார். சந்திரமோகனால் கொடுக்க முடியவில்லை. எனவே, அனுராதா ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.
உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்று 'கூகுள்' பார்த்து தெரிந்து கொண்டார். உடலை துண்டு போட என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றும் ஆய்வு செய்தார்.
கடந்த 15-ந் தேதி அனுராதா ரெட்டி வீட்டுக்கு சென்ற சந்திரமோகன், அவரது நெஞ்சிலும், வயிற்றிலும் குத்தி கொலை செய்தார். பின்னர், அனுராதாவின் தலையை துண்டித்தார். உடலை 6 துண்டுகளாக வெட்டினார்.
டெல்லி சாரதா கொலையில், உடல் பாகங்கள் இரவு நேரங்களில் நகரம் முழுவதும் வீசப்பட்டதுபோல், நாள்தோறும் ஒரு பாகத்தை வீசி எறிய சந்திரமோகன் திட்டமிட்டார்.
முதலில், கடந்த 17-ந்தேதி, தலையை மட்டும் முசி ஆற்றங்கரையில் வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
மற்ற உடல் பாகங்களை பிரிட்ஜ்க்குள் வைத்திருந்தார். அதிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, தினந்தோறும் வாசனை திரவியங்களை அடித்து வந்தார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுராதா ரெட்டியின் செல்போனை எடுத்து, அப்பெண்ணே அவருடைய நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதுபோல், நாள்தோறும் செய்தி அனுப்பி வந்தார். இதன்மூலம், அனுராதா உயிருடன் இருப்பதுபோல் நம்ப வைத்தார்.
சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
- வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). தம்பதியருக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) என்ற 2 மகன்களும், அபிநயா (19) என்ற மகளும் உள்ளனர்.
வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். நேற்று மதியம் 12 மணியளவில் ஆடுகளை அருகில் உள்ள மாந்தோப்பில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.
ஆடுகளை மேய்த்துக்கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வளர்மதி காதில் அணிந்திருந்த 1/2 பவுன் நகைக்காக அவரது காதை கத்தியால் அறுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வளர்மதி அங்கிருந்து தப்பி ஓடினார்.
வளர்மதியை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அவரை மடக்கி கழுத்து அறுத்து கொலை செய்தனர்.
ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்தார். மாலை 4 மணிக்கு அந்த வழியாக சென்ற மலர் என்ற பெண் வளர்மதியின் பிணத்தைப் பார்த்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இதுகுறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி பொறுப்பு இருதயராஜ் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா சம்பவ இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றில் உள்ள கிணறு வரை 2 கிலோமீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வளர்மதியின் பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வளர்மதியின் கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி வளர்மதியின் உறவினர்கள் மற்றும் சாத்கர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொலையுண்ட பெண் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது.
- சூட்கேசில் அடைத்து பெண்ணின் உடல் வீசப்பட்ட இடம் குடியிருப்பு பகுதியாகும்.
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
துரைப்பாக்கம் குமரன் குடி பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் மர்மமான முறையில் சாலையோரமாக சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அந்த சூட்கேசில் ரத்தக்கறை படிந்திருந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேஷை கைப்பற்றினார்.
தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, அடை யாறு துணை கமிஷனர் பொன்.கார்த்திக், உதவி கமிஷனர் பரத் ஆகியோரும் நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்ட னர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சூட்கேசில் இருந்த கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர் போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது. 5-க்கும் மேற்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் இருந்து போலீசார் மீட்டனர். பின்னர் அவைகளை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொலையுண்ட பெண் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. 30 வயதான அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றிய எந்த விவரங்களும் முழுமையாக தெரியவில்லை.
அது தொடர்பான விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீபா நேற்று இரவு மணலியில் இருந்து தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலருடன் துரைப்பாக்கம் பகுதிக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள்தான் தீபாவை கொலை செய்து உடலை துண்டித்து சூட்கேசில் அடைத்து வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதற்கிடையே தீபா பாலியல் அழகியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் தனக்கு நன்கு அறிமுகமான நபர்களுடன் துரைப்பாக்கம் பகுதிக்கு சென்று யாருடைய வீட்டிலாவது தங்கி இருக்கலாம் என்றும், அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட தகராறிலேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ம் சந்தேகிக்கப்படுகிறது.
தீபாவை துரைப்பாக்கத்துக்கு மணிகண்டன் என்பவரே அழைத்துச் சென்றிருப்பதாகவும் இவர் பாலியல் தரகர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகளை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டு உள்ளது.
சூட்கேசில் அடைத்து பெண்ணின் உடல் வீசப்பட்ட இடம் குடியிருப்பு பகுதியாகும். இன்று காலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சூட்கேசில் இருந்து பெண்ணின் உடலை மீட்டபோது அதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலையுண்ட தீபா பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்தும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகளை இன்றைக்குள் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
- பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே தலித் இளம்பெண்ணின் உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் பிரசாந்த் யாதவ் என்ற நபர் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்ஹால் இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்கப்போவதாக அந்தப் பெண் கூறி உள்ளார். இது பிரசாந்தை கோபப்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரசாந்த் அந்த பெண்ணை மிரட்டியதாக குடும்பத்தினர் கூறினர்.
அந்த பெண்ணிற்கு நவம்பர் 19-ந்தேதி மிரட்டல் விடுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
2 சந்தேக நபர்கள் நவம்பர் 19-ந்தேதி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்த நாள் புதன்கிழமை அந்த பெண்ணின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கூறுகையில்,
கர்ஹாலில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 23 வயதான பெண், நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். ஒருவர் பிரசாந்த் யாதவ் மற்றும் மற்றொருவர் மோகன் கத்தேரியா. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.
இரவு வரை தேடியும் சந்திரா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அது குறித்து கணவர் பாலு ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வடகாடு பகுதிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மாயமான சந்திராவை வடகாடு கடற்கரையை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. கழுத்தில் துணியால் இறுக்கியதற்கான தடயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொன்று விட்டு உடலை தீ வைத்து எரித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில வாலிபர்களையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.
அந்த 6 வாலிபர்களையும் போலீசார் மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள் சந்திராவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் சந்திராவின் உடலை எடுக்க அனுமதித்தனர். சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர்களில் 3 பேர் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தீவைத்து எரித்தது தெரியவந்தது. கடல் பாசி சேகரிப்பதற்காக சந்திரா சென்றபோது, அவரை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர்கள் 3 பேர் கஞ்சா போதையில் வழிமறித்து தகராறு செய்திருக்கின்றனர்.
பின்பு அவரை வடகாடு காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன்பிறகு சந்திராவை அங்கு வைத்து அவரது சேலையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.
சந்திராவை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முட்புதரில் அவரது உடலை போட்டு முகம் மற்றும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதையடுத்து வடமாநில வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் பணிபுரிந்து இறால் கம்பெனிக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் மாயமான சந்திராவை தேடியபோது அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் வடமாநில வாலிபர்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக வாலிபர்கள் 6 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வடமாநில வாலிபர்கள் 6 பேரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.
இதனால் சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்கள் யார்? என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. வாலிபர்கள் 6 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் சிகிச்சை முடிந்ததும் 6 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கண்காணிப்பில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
சந்திராவை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈட வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்த இறால் பண்ணையை மூட வேண்டும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.






