என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
    X

    கொலை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை

    • இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
    • ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

    பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.

    பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×