என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: 2 மாதங்களுக்கு மீன் விலை அதிகமாக இருக்கும்
- ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
சென்னை:
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். எனவே இந்த கால கட்டங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி அழிந்து விடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நாள டைவில் தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குறையும் நிலை ஏற்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தமிழக கடலோர பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்வது தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு செல்லவில்லை.
தங்களது எந்திர படகுகளை மீனவர்கள் தாங்கள் வழக்கமாக நிறுத்தும் பகுதிகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மொத்தம் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 61 நாட்களும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் எந்திர படகுகளில் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுக உதவி இயக்குனர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு இன்று அதிகாலை முதல் எந்த ஒரு எந்திரப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.
சென்னை காசிமேடு துறை முகத்தில் மட்டும் சுமார் 1,100 எந்திரப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத் தம் உள்ள 4,500 எந்திரப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4 ஆயிரம் எந்திரப் படகுகளும் இயங்காது.
இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப் படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் எந்திரப் படகுகளில் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்கு சென்று நட வடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறி சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அதை மீறிக் கடலுக்குச் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவர்கள் மீறிச் செயல்படக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் வழக்கம் போல உணவுக்கு மீன்கள் கிடைக்காது. கடலோரப் பகுதிகளில் சாதாரண படகுகளில் சென்று வலைவீசி பிடிக்கும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதன் காரணமாக மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து மீன்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின.
இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.






