என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் அமல் - மீன்கள் விலை கணிசமாக உயர்வு
    X

    மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் அமல் - மீன்கள் விலை கணிசமாக உயர்வு

    • தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
    • 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

    மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.

    தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.

    அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×