என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2 மடங்காக உயரும் நாள் விரைவில் வரும்- துணை ஜனாதிபதி பேச்சு
    X

    அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2 மடங்காக உயரும் நாள் விரைவில் வரும்- துணை ஜனாதிபதி பேச்சு

    • எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை.
    • தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம்.

    திருப்பூர்:

    இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    எல்லோரோடும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு பெரிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்திருக்கிறான். தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். அ.தி.மு.க.வோடும் பணியாற்றி இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நான் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான் சார்ந்த இயக்கத்தினுடைய கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை.

    அன்றைக்கு கம்யூனிஸ்ட் சகோதர கவுன்சிலர்களோடும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான். அதனால்தான் என்னவோ என்னை கட்சி அரசியலில் இருந்து இறைவன் விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எதுவுமே நம்முடைய முடிவிலே மட்டும்தான் நம்முடைய பயணம் தொடர்கிறதா என்று கேட்டால் என்னைப் பொறுத்தளவில் நிச்சயமாக இல்லை.

    நாம் ஒரு திசையில் பயணிப்போம் என்று நினைப்போம். அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம். அதே தான் நம்முடைய முழு வாழ்வும் என்கின்ற நிலை இருக்கும். ஆனால் கால சூழலும் இறைவனுடைய விருப்பமும் வேறாக இருக்கும். பங்களாதேஷ்க்கு எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நினைக்கவே இல்லை. அரசியல் ஈடுபாடு என்பது எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருந்தது.

    பள்ளியிலே படிக்கின்ற போது மாணவர் தலைவனாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். அவினாசி சுந்தரமூர்த்தி நாயனார் அருள் எனக்கு இல்லாமல் போயிருந்தால் நான் இந்த இடத்திலே உங்கள் முன்பாக நிற்பதற்கான வாய்ப்பே நிச்சயமாக சத்தியமாக இல்லை.

    என்னுடைய ஜாதகத்தை ஒருவர் பார்த்து சொன்னார். நீ இரண்டு முறையாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவாய் என்று. அவரது வாழ்க்கை முழுவதும் தொழில் ஜோசியம் அல்ல. அவர் அரசியலில் ஒரு பொறுப்பிலே இருக்கிறார். அவர் சொன்னதும் உடனே எனக்கு சிரிப்பே நீக்கவில்லை. நான் சார்ந்து இருக்கிற இயக்கத்திலே நான் ஒரு முறை கவுன்சிலர் ஆனாலே பெரியது என்று சொன்னேன். இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால் அவர் சொன்ன வாக்குப் பலித்திருக்கிறது. காங்கயத்தை சேர்ந்த நாவிதர் ஒருவர் எனது ஜாதகத்தை பார்த்து விட்டு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் அரசியலை விட்டு விலகி விடாதீர்கள் என்றார். அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும்.

    எம்.ஜி.ஆர். போல மக்களிடத்திலே செல்வாக்கு பெற்ற தலைவர் என்று சொன்னால் எனக்கு தெரிந்து யாரும் இல்லை. வாழ்க்கையில் ஒருவன் பிறந்து விட்டான் என்று சொன்னால் அவன் இறக்கின்ற வரை உழைக்க வேண்டும் என்பதுதான். நான் என்னுடைய தகப்பனாரோடு பல நேரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பேன். அவர் சொன்னது ஒன்று என்னுடைய மனதில் என்றைக்கும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். எவ்வளவு வசதி வந்தாலும் எவ்வளவு அதிகாரம் உன்னிடத்தில் வந்தாலும் சாப்பிடுகிறவரை நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் உனக்கு தருகின்ற உணவு உழைக்காமல் வரக்கூடாது. ஒருவர் தலைவராக உயர்கிறார் என்று சொன்னால் அவரிடத்தில் ஏதாவது ஒரு பண்பு இருந்தால் மட்டும்தான் அவர் தலைவராக உருவாக முடியும். நான் சார்ந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிக எதிரானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்பொழுது தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல . ஆனால் கலைஞர் கருணாநிதி இடத்தில் எனக்கு ஒன்று பிடிக்கும். எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத ஒரு தலைவர் . தோல்வியைப் பற்றி துவண்டு விடாமல் அவர் தொடர்ந்து உழைத்தார். கடுமையாக முயற்சிக்காமல் யாராலும் உயர்ந்த இடத்திற்கு வர முடியாது.

    தொடர்ந்து உழைத்தால் தொடர்ந்து உயரலாம். குறிக்கோளை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும், சத்தியமும் தர்மமும் அந்த பயணத்தில் இருக்க வேண்டும். அடுத்தவரை வீழ்த்துவதை விட தான் உயர வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

    திருப்பூர் பின்னலாடைக்கு எத்தனையோ சரிவுகள் வந்துள்ளது. ஆனால் இன்றைய சரிவு நம் கையில் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏற்றுமதி இதைவிட 2 மடங்காகும் நாள் விரைவில் வரும். அதுவரை நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பேசினார்.

    Next Story
    ×