என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் ஆடை"

    • சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.
    • இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்க சந்தையை அதிகம் நம்பி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத அதிகப்படியான வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு ஆடை அனுப்புவதில் தேக்கம் நிலவி வர்த்தக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவுடன் மத்திய அரசு வர்த்தக பேச்சுவார்த்தையை ஒருபுறம் தொடர்ந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 4-வது இடத்தை பிடித்துள்ளது. சீனா, வங்கதேசம், துருக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 9 மாதங்களில் ஐரோப்பிய நாட்டுக்கு இந்தியாவில் இருந்து ரூ.37 ஆயிரத்து 600 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

    ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி வருவதால், இதை சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பா சந்தையை கைப்பற்றும் முனைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள்.
    • அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும்.

    குறிப்பாக அமெரிக்காவுக்கான பின்னலாடைகள் ஏற்றுமதி ரூ.12,000 கோடி அளவில் பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள். 100 ரூபாய் ஆடைகள் இனி ரூ.150ஆக உயரும். அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்க நுகர்வோர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தியாவுக்கான வரி உயர்வை போட்டி நாடுகளான பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய அமெரிக்க ஆர்டர்கள் பாதிக்கும்.

    அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது.
    • மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்குள்ள பெரிய வர்த்தகர்கள், உலக நாடுகளில் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு, ஆடைகளைவிற்கின்றனர்.

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்காரணமாக, சங்கிலி தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், தொடர்புள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.

    கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்துவந்த ஆண்டில் மீண்டும் சூடுபிடித்தது. இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே துவங்கிய போரால், திருப்பூருக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது அரிதாக மாறியுள்ளது.

    புதிய வளர்ச்சி இல்லாவிட்டாலும், வழக்கமான ஆர்டர்களை பெற முடியாமல், ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் போராட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும், நூற்பாலைகள் மற்றும் தொடர்புடைய ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எப்படியும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது. இருப்பினும் சங்கிலி தொடராக உள்ள வர்த்தக தொடர்புகள் பாதிக்கும். இதன்காரணமாக, மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    ×