என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிசம்பர் மாதம் ரூ.13,550 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி- கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வளர்ச்சி
- அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
- ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், உலகளாவிய வர்த்தக பிரச்சனைகளுக்கு இடையிலும் கடந்த டிசம்பர் மாதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13 ஆயிரத்து 550 கோடியே 64 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.12 ஆயிரத்து 424 கோடியே 17 லட்சத்து நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.1 லட்சத்து ஆயிரத்து 87 கோடியே 19 லட்சத்துக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 940 கோடியே 59 லட்சத்துக்கு நடந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பை ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட நாடுகளுடன் ஈடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பான் நாட்டுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவுக்கான ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.6 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வரி பிரச்சனை இருந்தபோதிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி சாதகமாக காணப்படுகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவில் திருப்பூர் மாநகரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முந்தைய ஆண்டைவிட அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.






