என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளியுறவு கொள்கையில் பேரழிவு: பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மோடி திணறுகிறார் - கார்கே
    X

    வெளியுறவு கொள்கையில் பேரழிவு: பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மோடி திணறுகிறார் - கார்கே

    • அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்.
    • 50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும்.

    புதுடெல்லி:

    ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தேசிய நலன் மிகவும் உயர்ந்தது. நமது வெளியுறவு கொள்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் 50 சதவீத வரியை உயர்த்தி உள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியபோது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். குறைந்தது 30 முறையாவது கூறிவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி அன்று பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார். அங்கு பிரதமர் மோடி அமர்ந்து இருந்தார். வெளிப்படையாக சிரித்து கொண்டே இருந்தார். அதே நேரத்தில் டிரம்ப் 'பிரிக்ஸ்' இறந்து விட்டதாக அறிவித்தார்.

    பல மாதங்களாக சமச்சீர் வரிகளை டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். அது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயம், சிறு-குறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் நீங்கள் (மோடி) எதுவும் செய்யவில்லை.

    உங்கள் மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்களாக வாஷிங்டனில் முகாமிட்டு இருந்தனர்.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இப்போது டிரம்ப் மிரட்டி வற்புறுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

    50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும். இதை பிரதமர் மோடியால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது மோடி அரசுக்கு தெரியாது.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.



    Next Story
    ×