என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை
    X

    அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை

    • அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று பணியாற்றிய போது தமிழக பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது.

    அண்ணாமலை பொறுப்பு ஏற்றபோது அதன் வளர்ச்சி இரட்டிப்பாக மாறியது. குறிப்பாக கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து கணிசமான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும் பூத் கமிட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பா.ஜ.க. அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தனது நேரடியாக கண்காணிப்பில் தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்க தொடங்கி உள்ளார்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை மிக பிரமாண்டமாக வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்" என்று கூறியிருந்தார்.

    அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பாஜகவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கிராமப் பகுதிகளில் பா.ஜ.க.வை வலுப்படுத்த செய்துள்ள பணிகளை அமித்ஷா ஆவணங்கள் அடிப்படையில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் ராமதாசுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று தெரிகிறது. குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் பணிகளை கூட்டணி கட்சிகள் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

    அமித்ஷாவின் சென்னை பயண நிகழ்ச்சிகளை பொறுத்து அவர்கள் இருவரையும் அவர் சந்திப்பாரா? என்பது தெரிய வரும். அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    அடுத்த மாதம் அமித்ஷா வரும்போது சில முக்கிய வியூகங்களை எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஜூலை மாத தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×