என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
- 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
- இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
அப்போது அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவன் அங்கு டிராக்டரை ஓட்டி வந்தான். இந்த நிலையில் சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் காளியப்பன், குமார் ஆகியோர் மீது மோதியது.
இந்த விபத்தில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமாருக்கு இடது கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் டிராக்டர் மோதி இறந்த காளியப்பன் சாவிற்கு காரணமான சிறுவனை கைது செய்ய கோரி அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் காளியப்பனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் விபத்திற்கு காரணமான சிறுவன், சிறுவனின் தந்தை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






