என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முக்கூடலில் ருசிகரம்- 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்துக் கொண்டே இருக்கும் முதியவர்
    X

    முக்கூடலில் ருசிகரம்- 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்துக் கொண்டே இருக்கும் முதியவர்

    • தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.
    • அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. 80 வயதான முதியவர் ஆரம்ப காலங்களில் எலக்ட்ரீசியன், சைக்கிள் கடை என பல்வேறு தொழில்கள் செய்து வந்த நிலையில் தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டிற்கு தேவையான சிறுசிறு வேலைகளை செய்து வருகிறார்.

    அது மட்டுமின்றி அவரது பள்ளி பருவத்தில் இருந்து சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்து கொண்டே இருந்து வருகிறார்.

    இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், நான் 1956-ம் ஆண்டு முக்கூடல் சொக்கலால் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் போது, எனது வகுப்பில் மாணவர் ஒருவர் சரியாக பேச முடியாமல் தவித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவன் வாயில் சிறிய கல்லை போட்டு பேசுமாறு தெரிவித்தார். இதே போல் நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, நான் உட்பட எனது நண்பர்கள் 10 பேர் வாயில் கல்லை போட்டு சுற்றி திரிந்தோம். அதில் ஒரு நண்பன் விளையாடும் போது பல் உடைந்து கல்லை வெளியேற்றிவிட்டான். தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.

    ஆனால் எனக்கு வெளியே எடுக்க விருப்பமில்லை. சாப்பிடும் போது, குளிக்கும் போது, வேலை பார்க்கும் போது, தூங்கும் போது என அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன். இவ்வாறு சுமார் 69 ஆண்டுகளாக இதை போல் வாயில் கல்லை போட்டுள்ளேன்.

    ஒருமுறை நான் தூங்கி கொண்டிருக்கும் போது வாயில் இருந்த கல்லை எனது மனைவி எடுத்து நெல் மூட்டையில் போட்டு விட்டார். அதனை தேடி எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டேன் என தெரிவித்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் மகன் பிரசாத் கூறுகையில், எனது சித்தப்பா சிறுவயதில் இருந்தே வாயில் கல்லை போட்டுள்ளார். இதனை நாங்கள் ஒரு சாதனையாகவே பார்க்கிறோம் என்றார்.

    Next Story
    ×