search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senior citizen"

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பக்தர்கள் வசதிக்காக திருப்பதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி ஏற்கனவே அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் திரள்வதால் சுவாமி தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் கோவிலில் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மூத்தகுடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனிவரிசை தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கடற்கரையோரம் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு தனியாக அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு மூத்தகுடிமக்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 60 வயதை கடந்த மூத்தகுடிமக்கள் இந்தவழியாக சென்று தரிசனம் செய்யலாம்.

    இந்த பாதையில் செல்லும் முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றின் ஏதாவது ஒரு அட்டையின் அசல் சான்றிதழை காட்டிவிட்டு இந்த வழியாக செல்லலாம்.

    இந்த நடைமுறை விரைவில் வர உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், முதியோர்கள் சிகிச்சை பெற தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
    முருகபவனம்:

    திண்டுக்கல் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அந்த வகையில் முதியோர்களும் கணிசமான அளவில் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

    இவர்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மனநலம் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவை முதியோர்களை அதிகம் தாக்கும் நோயாக உள்ளது. இதற்காக சிகிச்சை பெற இங்கு வரும் முதியோர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு சிகிச்சை பிரிவுகளில் முதியோருக்காக தனி வரிசை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுவாக முதியோர்கள் இங்கு சிகிச்சை பெற வரும் போது நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான சீட்டு வாங்கும் இடம், ரத்தவங்கி, மருந்தகம், ஆண்கள், பெண்கள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் ஊசி போடும் இடம் ஆகிய இடங்களில் முதியோருக்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். எனவே முதியோர்கள் இந்த சிறப்பு சலுகையை பயன் படுத்தி விரைவாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே நிர்வாகத்தின் தவறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பயணிக்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. #IndianRailway #Fined
    சஹரன்பூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.



    மன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    விசாரணையின்போது பயணி தான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.

    முடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  #IndianRailway #Fined 
    ×