search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashwini Vaishnaw"

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
    • மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.

    என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
    • போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

    ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
    • முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டவர்), இன்ஸ்கிராம் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு செய்தியை பதிவிட்டால், நொடிப்பொழுதிற்குள் பெரும்பாலானோரை சென்றடைந்துவிடும்.

    ஆரம்ப காலத்தில் உண்மையான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது போலிச் செய்திகள் மிகப்பெரிய அளவில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை நம்பி வன்முறைகள் ஏற்படுவது. நற்பெயருக்கு கழங்கம் விளைவிக்கப்படுவதும் உண்டு.

    இதை கட்டுப்படுத்த சமூக வலைத்தளங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தபோதிலும் முற்றிலும் போலியான செய்திகள் பரப்பப்பட்டுதான் வருகிறது.

    இந்த நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில் ''முற்றிலும் போலியான செய்திகளை எதிர்கொள்ள நாம் புதிய விதிமுறை கொண்டு வர இருக்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்கள், முற்றிலும் போலியான தரவுகளை கண்டுபிடித்தல், தடுத்தல் போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான நடைமுறை தேவை என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. முற்றிலும் போலி தரவுகள் ஜனநாயத்திற்கு புதிய மிரட்டலாக வளர்ந்துள்ளது" என்றார்.

    • இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது.
    • தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரெயில் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தற்போது இந்திய ரெயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது. இது அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக, நமக்கு 3,000 கூடுதல் ரெயில்கள் தேவை. இது அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பல பயணங்களை மேற்கொள்ளும்' என தெரிவித்தார்.

    இதைப்போல ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து ரெயில் தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை அறிமுகம் செய்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் தற்போதைய ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
    • விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:-

    ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது.
    • துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து குறித்து ரெயில்வேயும், அரசும் விசாரணை நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    ஒடிசா ரெயில் கோர விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா என கேட்கின்றனர். அது வருமாறு:-

    காங்கிரஸ்பாராளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி:-

    ஒடிசாவில் பேரழிவாய் நடந்திருக்கிற பயங்கர ரெயில் விபத்தால் நான் மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவிக்கிறேன்.

    தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்:-

    ஒடிசாவில் நடந்துள்ள இதுபோன்ற ரெயில் விபத்தை நாடு சமீபத்தில் கண்டது இல்லை. கடந்த காலத்தில் இப்படி பெரும் விபத்துகள் நடந்த போது ரெயில்வே மந்திரிகள் பதவி விலகி உள்ளனர். ஆனால் இதுபற்றி தற்போது யாரும் பேசவில்லை.

    துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து குறித்து ரெயில்வேயும், அரசும் விசாரணை நடத்த வேண்டும்.

    தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் கிளைடி கிராஸ்டோ:-

    ஒடிசா ரெயில் விபத்துக்காக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் இது எந்தப் பலனையும் தராது. ஏனென்றால் தார்மீகத்தில் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருந்தால் அது மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களில் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஜ் பூஷண் சரண்சிங்கை பதவி விலகச் சொல்லி இருக்கும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்:-

    முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரெயில்வே மந்திரி, எப்போதுமே ரெயில்வே அமைப்பு பாதுகாப்பானது, விபத்து நேராது என்று கூறி வந்துள்ளார். 1956-ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அப்போதைய ரெயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். ஆனால் தற்போது மோடி அரசில் உள்ள ரெயில்வே மந்திரியிடம் இதை நாம் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்.
    • தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது.

    புதுடெல்லி :

    மத்திய தொலைதொடர்பு மந்திரி அஷ்விணி வைஷ்ணவ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் செல்போனுக்கு வருகிற 'ஸ்பாம்' அழைப்பு (திரளானோருக்கு வணிக நோக்கில் விடுக்கிற அழைப்பு) 'சைபர்' மோசடி (இணையதள குற்றம்) தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், "செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது. தங்களுக்கு தெரிந்த, அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்" என கூறினார்.

    மேலும் அவர், 'ஸ்பாம்' அழைப்புகள், 'சைபர்' மோசடிகள் போன்றவற்றைத் தடுப்பதற்காக தனது அமைச்சகம் 'சஞ்சார் சாதி' என்ற தளத்தை தொடங்கி இருப்பதாகவும், 40 லட்சத்துக்கும் மேலான தவறான 'சிம்' கார்டுகளும், 41 ஆயிரம் தவறான விற்பனை மைய ஏஜெண்டுகளும் கருப்பு பட்டியலிட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல.
    • பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    புதுடெல்லி :

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று காட்டமாக விமர்சித்தார். அக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கார்கே வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிலையில், அவருக்கு ரெயில்வே மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் பற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கலாசாரத்தையும், மனப்பான்மையையும் காட்டுகிறது. தனிப்பட்ட விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கைவிடவில்லை என்று தெரிகிறது.

    முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஒரு தடவை பிரதமர் மோடியை 'பிறர் வாழ்க்கையுடன் விளையாடுபவர்' என்று கூறினார்.

    தார்மீக அதிகாரம் என்று வரும்போது, பிரதமர் மோடி மற்ற தலைவர்களை போன்றவர் அல்ல. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் சரியான திசையில் நாட்டை அழைத்துச் செல்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.

    தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தான் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான காரியத்தை அவர் செய்கிறார். தனது விருப்பத்தை நிறைவேற்ற அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
    • தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும்.
    • மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    5ஜி தொலைதொடர்பு சேவை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணைய சேவை மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சரவை தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. வருகிற ஜூலை மாதத்திற்குள் இந்த ஏலத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இந்நிலையில் 5ஜி சேவை குறித்து மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என அவர் கூறினார்.

    ×