என் மலர்
இந்தியா

பயணிகள் கவனிக்க: ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் ரிசர்வேஷன் சார்ட்
- ரெயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும்.
- இதனால் பயணிகளுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றம் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இது பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரெயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது.
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும். தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.






