என் மலர்
நீங்கள் தேடியது "fined"
- பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
- காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.
இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.
இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.
வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.
இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
- விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.
மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.
- ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் வழங்கினர்.
- 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரும், அமீர் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் பெங்களூரு நகரில் சில ஆண்டுகளாக இயங்கி வந்தன.
இதில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பெங்களூரு வசந்தம் நகரில் வசிக்கும் தொழிலதிபர் கே.ஜி.எப். பாபு ஒரு திரைப்பட நடிகரிடமிருந்து வாங்கியிருந்தார்.
அப்போது, வாங்குபவர் 15 நாட்களுக்குள் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்பட்டது.
இருப்பினும், வாங்கிய பிறகு கே.ஜி.எப். பாபு அதை தனது பெயரில் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த காருக்கு உரிய வரி செலுத்தாமலும் ஓட்டி வந்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் வசந்தம் நகரில் உள்ள தொழிலதிபர் கே.ஜி.எ.ப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு நிறுத்தி வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.
உரிய கட்டணம் செலுத்தாமல் 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமிதாப் பச்சனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த கார் தற்காலிகமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.
இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
- குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.
குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார்.
- நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.
சென்னை:
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன். அண்ணாசாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 19-ந்தேதி காலை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் டீ குடித்தபடி சிகரெட் புகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கேசவனிடம் புகை பிடித்ததை கண்டித்தார்.
மேலும் 'நான் போலீஸ் உயர் அதிகாரி'பொது இடத்தில் நின்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் சிகரெட் பிடிக்கலாமா? தபால் நிலையம் முன்பு சிகரெட் பிடித்ததால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராத தொகையை கட்டவில்லை என்றால், கைது செய்வேன் என்று மிரட்டினார். மேலும் கேசவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றார். இதனால் பயந்து போன கேசவன் அபராதத்தை நான் கட்டிவிடுகிறேன் என்று கூறி, அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.25 ஆயிரத்தை எடுத்து போலீஸ் போல் மிரட்டிய வாலிபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் பணத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனை வெளியில் சொன்னால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்து கேசவன் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் தன்னை மிரட்டி பணம் பெற்றது போலீஸ் அதிகாரி என்று நினைத்து இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவன் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
அப்போது கேசவனிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பறித்து சென்றது நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான டான்ஸ் ஸ்டூவர்ட் (32) என்பது தெரிந்தது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சிகரெட் புகைத்த கேசவனை மிரட்டி அவர் ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றது உறுதியானது. இதையடுத்து டான்ஸ் ஸ்டூவர்ட்டை போலீசார் கைது செய்தனர்.
- திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர்.
- பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.
நாமக்கல்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான பழைய இரும்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கடையில் சேர்த்து பின்னர் புதிய இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் இரும்பு பொருட்களை எடை போடும் பகுதிக்கு, கடைகளில் இருந்து வாகனங்களில் இரும்பு கடை உரிமையாளர்கள் எடுத்துச் செல்வார்கள்.
இந்நிலையில் இவ்வாறு இரும்பு பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை, எடை போடும் நிறுவனத்திற்கு சற்று முன்பாக நின்று கொண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் மடக்கி பிடிக்கிறார்கள். பின்னர் முறையான பில் உள்ளதா? எவ்வளவு எடை உள்ளது? என்று கேட்டும், ஏதாவது ஒரு காரணத்தை கூறியும் பணம் பறிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். மேலும் அதிக அளவில் அபராதமும் விதித்து வருகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த நிலையில், இரும்பு கடைகளின் அருகே நின்று அபராதம் விதித்து வரும் சம்பவத்தால், தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளி விட்டதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள், லாரியை மறித்தனர். பின்னர், பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.
அப்போது பின்னால் வந்த வாகன உரிமையாளர், பொருட்களுக்கு பில் தன்னிடம் இருப்பதாகவும், எடை போட தான் பொருட்களை கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர் அதை செலுத்த மறுத்ததுடன் மற்ற இரும்பு கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் பேசினர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. இதை அடுத்து அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் ரூ.1.5 லட்சம் அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று கூறிய அதிகாரிகள், அபராத பணத்தை கட்டினால் தான் வாகனத்தை விடுவிப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய வியாபாரிகள், அபராதத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டனர். இதை அடுத்து வாகனத்தை விடுவித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
சாலையில் செல்லும்போது வாகனங்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு முறையான பில் உள்ளதா, எவ்வளவு பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் குறிப்பாக பழைய இரும்பு கடைக்கும், எடை போடும் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று கொண்டு அதிகாரிகள் வேண்டுமென்றே வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்வது இரும்பு வியாபாரிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே விதிகளை மீறும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரும்பு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
- சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை,
கோவை மாநகரில் ஹெல்மெட் அணியாமல இருசக்கர வாகன ஓட்டி செல்பவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
காளப்பட்டி ரோடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று நடந்த வாகன தணிக்கையில், ெஹல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து 1 மணி நேரம் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். பின்னர், அவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.
இது குறித்து மாநகரபோலீஸ் கமிஷனர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
கோவையில் 90 சத வீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் 10 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதில்லை.
சாலை விதிகளை கடைபிடிப்பதன்மு க்கியத்து வத்தை வலியுறுத்தும் வகையில் 15 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 400 போலீசார், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை அழைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். வாரம் ஒருமுறை வெவ்வேறு நாட்களில் இதுபோன்ற சிறப்புத் தணிக்கை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது:-
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2,543 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த 1,282 பேரில், 937 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 345 பேரை எச்சரித்து அனுப்பி உள்ளோம். மொத்தம் 3,875 பேருக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
- தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.
தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.
ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.
- ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
- 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.
ஊட்டி
குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலர் அங்காடியில் 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுகுறித்து குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிறுவனை பணிக்கு அமர்த்திய மலர் அங்காடி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேபோன்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் 16 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த சிறுவனை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கலெக்டருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
- வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
- வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.
- அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
- அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
மதுரை
மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.






