என் மலர்
இந்தியா

VIDEO: சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!- போலீஸ்காரரை மடக்கி பிடித்து அபராதம் கட்ட வைத்த வாலிபர்
- 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
- விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.
மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.






