search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arumbakkam Postal Office"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார்.
    • நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

    சென்னை:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன். அண்ணாசாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 19-ந்தேதி காலை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் டீ குடித்தபடி சிகரெட் புகைத்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கேசவனிடம் புகை பிடித்ததை கண்டித்தார்.

    மேலும் 'நான் போலீஸ் உயர் அதிகாரி'பொது இடத்தில் நின்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் சிகரெட் பிடிக்கலாமா? தபால் நிலையம் முன்பு சிகரெட் பிடித்ததால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அபராத தொகையை கட்டவில்லை என்றால், கைது செய்வேன் என்று மிரட்டினார். மேலும் கேசவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றார். இதனால் பயந்து போன கேசவன் அபராதத்தை நான் கட்டிவிடுகிறேன் என்று கூறி, அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.25 ஆயிரத்தை எடுத்து போலீஸ் போல் மிரட்டிய வாலிபரிடம் கொடுத்தார். பின்னர் அந்த வாலிபர் பணத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதனை வெளியில் சொன்னால் நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்து கேசவன் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அவர் தன்னை மிரட்டி பணம் பெற்றது போலீஸ் அதிகாரி என்று நினைத்து இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்தது குறித்து கேசவன் நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்கள் விசாரித்தபோது பணம் பறித்து சென்றது போலீஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவன் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    அப்போது கேசவனிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பறித்து சென்றது நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான டான்ஸ் ஸ்டூவர்ட் (32) என்பது தெரிந்தது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சிகரெட் புகைத்த கேசவனை மிரட்டி அவர் ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றது உறுதியானது. இதையடுத்து டான்ஸ் ஸ்டூவர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

    ×