search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய இரும்பு ஏற்றிச் சென்ற லாரிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்த வணிகவரி அதிகாரிகள்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

    பழைய இரும்பு ஏற்றிச் சென்ற லாரிக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்த வணிகவரி அதிகாரிகள்

    • திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர்.
    • பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான பழைய இரும்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று பழைய இரும்பு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கடையில் சேர்த்து பின்னர் புதிய இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பி வருகிறார்கள். அப்படி அனுப்பும் இரும்பு பொருட்களை எடை போடும் பகுதிக்கு, கடைகளில் இருந்து வாகனங்களில் இரும்பு கடை உரிமையாளர்கள் எடுத்துச் செல்வார்கள்.

    இந்நிலையில் இவ்வாறு இரும்பு பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை, எடை போடும் நிறுவனத்திற்கு சற்று முன்பாக நின்று கொண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் மடக்கி பிடிக்கிறார்கள். பின்னர் முறையான பில் உள்ளதா? எவ்வளவு எடை உள்ளது? என்று கேட்டும், ஏதாவது ஒரு காரணத்தை கூறியும் பணம் பறிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். மேலும் அதிக அளவில் அபராதமும் விதித்து வருகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்த நிலையில், இரும்பு கடைகளின் அருகே நின்று அபராதம் விதித்து வரும் சம்பவத்தால், தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளி விட்டதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் இருந்து, லாரி ஒன்றில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வே-பிரிட்ச்சுக்கு எடை போடுவதற்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வணிக வரித்துறை அதிகாரிகள், லாரியை மறித்தனர். பின்னர், பழைய இரும்பு பொருட்களுக்கு முறையான பில் இருக்கிறதா? எவ்வளவு எடை உள்ளது? என்பது குறித்து கேட்டனர்.

    அப்போது பின்னால் வந்த வாகன உரிமையாளர், பொருட்களுக்கு பில் தன்னிடம் இருப்பதாகவும், எடை போட தான் பொருட்களை கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த வாகன உரிமையாளர் அதை செலுத்த மறுத்ததுடன் மற்ற இரும்பு கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கும் இதுபற்றி தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் பேசினர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. இதை அடுத்து அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் ரூ.1.5 லட்சம் அபராதம் கட்டியே தீர வேண்டும் என்று கூறிய அதிகாரிகள், அபராத பணத்தை கட்டினால் தான் வாகனத்தை விடுவிப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய வியாபாரிகள், அபராதத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டனர். இதை அடுத்து வாகனத்தை விடுவித்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

    சாலையில் செல்லும்போது வாகனங்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு முறையான பில் உள்ளதா, எவ்வளவு பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் குறிப்பாக பழைய இரும்பு கடைக்கும், எடை போடும் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று கொண்டு அதிகாரிகள் வேண்டுமென்றே வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் செய்வது இரும்பு வியாபாரிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே விதிகளை மீறும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரும்பு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×