என் மலர்
இந்தியா

உண்மையான இந்தியன் தாத்தா.. கேரளாவில் 90 வயதில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் நாராயணன்
- தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
- எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.
கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.
போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.
இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.
கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.






