search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone quarry"

    • வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்
    • அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகாப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தென்னம்பூண்டியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் .இவரதுமனைவி ஜனனி (வயது24). இவர் வழக்கம் போல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி வெடித்ததில் மலைக்கற்க்கள் பெயர்ந்து வந்து ஜனனியின் வீட்டின் மேல் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார் .

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது .எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகா ப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.
    • விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன

    பல்லடம்

    பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, குவாரிகளின் தற்போதைய நிலை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாா், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியம், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்த குவாரிகள் நடைபெறும் இடங்களில் டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வினை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வினை முடித்தனர்.

    இதில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குவாரிகளுக்கு ரூ. 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்கு மட்டும் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குவாரி அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    • குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.

    தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
    • கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

    திருப்பூர் :

    பல்லடம் கோடங்கிப்பாளையத்தில் 4 புதிய கல் குவாரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 16 பழைய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்–டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுகட்–டுப்–பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர், 'கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பசுமை வளையங்கள் முறையாக அமைக்கவில்லை. விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உரிய விதிமுறைகளை கடைபிடித்து கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்' என்றனர்.

    மற்றொரு தரப்பினர், 'கல் குவாரியால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இதர தொழில்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறும். பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    • புத்தேரி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
    • போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் இருக்கன்துறை ஊராட்சி புத்தேரி என்னும் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.

    கல்குவாரி

    இதில் நேற்று முன்தினம் கல்குவாரியில் கற்களை தகர்க்க சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் கற்கள் வெடித்து சிதறியதில் சுடலை மற்றும் இசக்கியப்பன் என்பவரது வீட்டின் மேற்கூறையும் மற்றும் வீட்டின் பக்கவாட்டின் சிமெண்ட் பூச்சிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    வாழைகள சேதம்

    மேலும் கல் குவாரிகளில் வெடித்து சிதறிய கற்கள் விவசாயிகள் பயிரிட்ட வாழைகள் மீது விழுந்துள்ளது. இதனால் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.

    இதையறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊரின் மையப் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கஞ்சி காட்சியும் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்கிறது.

    சம்பவ இடத்திற்கு பாரதீய ஜனதா மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், புத்தேரியில் கல் குவாரி அமைக்க ஆரம்பத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    போலீஸ் குவிப்பு

    கல்குவாரியால் இவ்வளவு விளைவுகள் நடந்த பின்பும் அதிகாரிகள் பொதுமக்களை வந்து சந்திக்கவில்லை. கல்குவாரியை மூடவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    இதனால் புத்தேரி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அணைந்த பெருமாள் நாடானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மற்றும் அணைந்த பெருமாள் நாடானூர் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் தனியார் குவாரி ஒன்றுக்கு மீண்டும் கல் உடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி முன்பு செயல்படும்போது வீடுகளில் விரிசல் விழுந்ததாகவும் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், முதியோர் போன்றோர் பாதிக்கப்படுவதாகவும் வீடுகளில் விரிசல் விழுவதாகும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை மற்றும் முத்தமிழ் செல்வி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    • மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
    • விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.

    மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • சட்ட விரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார்.
    • புதிய குவாரிகளுக்கு அங்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில் அருகே ஆனையூர் பகுதியில் உள்ள கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராமமக்கள் இன்று மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதன் லைசென்சு புதுப்பிக்கப்படாததால் சில ஆண்டுகளாக கல்குவாரி செயல்படாமல் இருந்தது.

    இந்நிலையில் இந்த குவாரியின் லைசென்சு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து குவாரியை திறக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து இந்த குவாரியை திறக்கக்கூடாது என அப்பகுதியினர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அப்போது தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் இன்று ஆனையூர் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை பகுதியில் குவாரியில் கல் உடைக்க அனுமதி கேட்டு கனிம வளத்துறை அலுவலர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல் உடைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கல்குவாரியில் கல் உடைப்பதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மைதிலிக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இதையடுத்து உதவி இயக்குனர் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கல் உடைக்கு தொழிலாளிகளிடம், இனி இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று கூறினர்.

    மேலும் கல் உடைத்து கற்களை ஏற்றி கொண்டு வாகனங்கள் செல்லும் வழியை தடை செய்ய பள்ளம் தோண்ட பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தொழிலாளர்கள், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரம். கல் குவாரியை ஏலம் விடுவதாக இருந்தாலும், அதனை நாங்களே ஏலம் எடுத்து கொள்கிறோம் என்றனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 15 நாட்களுக்கு இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.#tamilnews
    ×