search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman"

    • கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார்.
    • அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சித்தாபுதூர் அருகே உள்ள புதியவர் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கோமளம் (வயது 66). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் கோமளம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டிற்குள் அதுமீறி நுழைந்தனர். இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் கோமளத்தின் கைகளையும், வாயையும் துணியால் கட்டினர். பின்னர் அவர் அணிந்து இருந்த செயின், கம்மல், வளையல் ஆகியவற்றை பறித்தனர். இதனை தொடர்ந்து வாலிபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    கோமளத்துக்கு அவரது சகோதரர் மனைவி அனிதா என்பவர் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல இரவு சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு கோமளத்துக்கு கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை யாரும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனிதா ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டிற்கு 2 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார். பின்னர் அனிதா வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் கதவை திறக்கும்படி கத்தினர். கதவை திறக்கவில்லை என்றால் கோமளத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த அனிதா கதவை திறந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை முகத்தில் தூவி விட்டு தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் 2 பேரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் (21), லிக்னேஷ்வரன் (25) என்பது தெரிய வந்தது.

    போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் தங்கி இருப்பதும், மூதாட்டி தனியாக வசிப்பதை கண்காணித்து கொள்ளையடிக்க வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயாத்தாளை காணவில்லை.
    • ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (68). இவரது மனைவி தாயாத்தாள் (65). இவருக்கு கடந்த சில வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த தாயாத்தாளை காணவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கணவர் பழனிசாமி தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட வேலப்பகவுண்டன் வலசு, செம்பாளி தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டி உடல் ஒன்று மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்தபோது அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பது தெரியவந்தது.

    நோய் கொடுமையால் மனமுடைந்த தாயாத்தாள் ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
    • பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

    அதுசமயம் அந்த வழியே சென்ற இரண்டு பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரிய தைரிய நாடார் என்பவரது மகன் அந்தோணி முத்து (வயது 58) மற்றும் ஜெகதாளன் என்பவரது மகன் வினோத் (வயது 32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
    • குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).

    இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் அன்னசுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.

     களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (வயது 70). இவரது மகன் ஆதி நாராயணன். ஆதிநாராய ணனுக்கும், அவரது மனைவி விமலா விற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

    சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்ன சுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக் கையும் தேடி வருகின்றனர்.

    • குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
    • பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வடமாநில மூதாட்டி ஒருவர் மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மூதாட்டியை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி மாஜி (வயது 70) என்பதும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர். ஆனால் அவர் அங்கு தங்க விருப்பம் இல்லை எனவும் திரும்பவும் ஒடிசாவில் உள்ள குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இது பற்றி ஒடிசாவில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் போலீசாரிடம் பத்மாவதி மாஜியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக மூதாட்டி பத்மாவதி மாஜி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக நல அலுவலர் கல்யாணி, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஜான்சி, வழக்கு பணியாளர் கலையரசி உடன் இருந்தனர்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52).
    • இடைச்சி விளையில் இருந்து திசையன்விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார்.

    நெல்லை:

    திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மெரினா (வயது 52). இவர் சம்பவத்தன்று திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு புறப்பட்டார்.

    இடைச்சி விளையில் இருந்து திசையன் விளைக்கு பஸ்ஸில் ஏறி சென்ற மெரினா அங்கு இறங்கியதும் கைப்பையை பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதை அறிந்த மெரினா இது தொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மனைவி சின்னகண்ணி( வயது 73). கூலித் தொழிலாளியான இவர் தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே தார் சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பங்குறிச்சி ஓட்டக்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சின்னக்கண்ணி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர், கரூர் அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
    • கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

    அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

    பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.

    மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

    இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

    மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

    காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

    இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார்.
    • நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகாயினி அம்மா. 101 வயது மூதாட்டியான இவர், குடும்ப ஏழ்மை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றார். இதனால் அவர் தனது இளமை பருவத்தில் பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தனது 96 வயதில் அவருக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே கடந்த 2018-ம் ஆண்டு 4-ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வமாக படித்த அவர், தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

    இதன்மூலம் மிக அதிக வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியானவர் என்ற பெருமையை கார்த்திகாயினி அம்மா பெற்றார். அப்போது அவருக்கு நாரீ சக்தி என்ற விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் வழங்கினார். இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி கார்த்திகாயினி அம்மா ஹரிப்பாட்டில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    புளியங்குடியை சேர்ந்த வர் பேச்சிமுத்து. இவரது மனைவி சுப்பாத்தாள் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் கல்லிடைக்குறிச்சி செல்வ தற்காக ஆலங்குளத்திற்கு பஸ்சில் வந்துள்ளார்.

    அங்கிருந்து அம்பாச முத்திரம் செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுப்பாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சி களின் அடிப்படையில் தப்பியோடிய அந்த பெண்ணை தேடி வருகின்ற னர்.

    ஆலங்குளம் பஸ் நிலையத்தில் மாலை நேரங்க ளில் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், பள்ளி, கல்லூரி முடித்து வரும் மாணவ-மாணவிகள் வெகு நேரம் பஸ் நிலையத்திலேயே சுற்றி திரிவதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக பேருராட்சி கவுன்சிலர் சாலமோன்ராஜா பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

    மேலும் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் இயங்குகிறதா? முடங்கியுள்ள தா? என்பது தெரியவில்லை. இந்த காரணத்தால் பொதுமக்கள், பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். எனவே இங்குள்ள காமிராக்களை பழுது நீக்குவதுடன், பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×