என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்பனை செய்யும் மூதாட்டி- மன நிம்மதியுடன் வாழ்வதாக நெகிழ்ச்சி
- ஆரம்பத்தில் 5 பைசாவுக்கு ஆப்பம் விற்பனை செய்தேன்.
- விலைவாசியை கருத்தில் கொண்டு 10 பைசா, 25 பைசா, 50 பைசா என்று படிப்படியாக விலையை உயர்த்தி விற்பனை செய்தேன்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 70). திருமணமான சில வருடங்களில் ராமர் இறந்து விட்டார். இதனால் ராஜம்மாள் தனது மகன் சங்கரநாராயணனுடன் வசித்து வருகிறார்.
ராஜம்மாள் அப்பகுதியில் குறைந்த விலையில் ஆப்பம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். விலைவாசி கடுமையாக உயர்ந்தபோதிலும் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறார். இதனை அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து மூதாட்டி ராஜம்மாள் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குறைந்த விலையில் ஆப்பம் விற்று வருகிறேன். ஆரம்பத்தில் 5 பைசாவுக்கு ஆப்பம் விற்பனை செய்தேன். விலைவாசியை கருத்தில் கொண்டு 10 பைசா, 25 பைசா, 50 பைசா என்று படிப்படியாக விலையை உயர்த்தி விற்பனை செய்தேன்.
கடந்த 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறேன். கணவர் இறந்த பின்னர் வீட்டில் குழந்தையுடன் இருந்தபோது மனதுக்கு பாரமாக இருந்தது. மேலும் அதிக கவலை அடைந்ததால் இதய நோயாலும் பாதிக்கப்பட்டேன். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக குறைந்த விலையில் ஆப்பம் விற்க தொடங்கினேன். இது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளித்தது. தொடர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் ஆப்பம் வழங்க முடிவு செய்தேன். அதன்படி நாள்தோறும் காலையில் ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்கிறேன். இதனால் வாழ்க்கை தேவைக்கு போதுமான பணம் கிடைப்பதுடன் மன நிம்மதியுடன் வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.






