search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட்"

    • 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
    • சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.

    • விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது
    • விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம்

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆதலால் விராட் கோலியின் உடை, ஸ்டைல், சிகை அலங்காரம், டாட்டூ போன்றவை அடிக்கடி பேசுபொருளாக மாறும்.

    அவ்வகையில் விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம். இவர் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஹேர் கட் செய்து வருகிறார். எம்.எஸ். டோனிக்கும் இவர் தான் ஹேர் ட்ரெஸ்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கோலியின் ஹேர் கட் குறித்து பேசிய சிகையலங்கார நிபுணர் ஹக்கீம், "நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள். ஹேர் கட் செய்வதற்கு நான் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் ஆகும்.

    டோனி மற்றும் விராட் இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள், பல வருடங்களாக என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறர்கள். இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால், வித்தியாசமான, கூலான லுக்கில் புதுவித ஹேர் கட் செய்ய முடிவு செய்தோம்.

    விராட் எப்போதுமே இந்த முறை நாம் புதிய ஹேர் ஸ்டைலை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்த முறை இந்த மாதிரி முயற்சி செய்யலாம் என்று எப்போதுமே ஒரு ரெபரென்ஸ் வைத்திருப்பார்.

    அதன்படி, இந்த முறை முற்றிலும் வித்தியசமான சூப்பர் கூல் லுக் ஒன்றை செய்ய முடிவு செய்தோம். விராட்டின் இந்த புது லுக்கை நான் எனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததும் அந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை மிரளவைத்தது என்று தெரிவித்தார்.

    ஆனாலும் விராட் கோலியின் ஹேர் கட்டுக்கு எவ்வளவு வசூலித்தார் என்று அவர் வெளிப்படையாக கூறவில்லை.

    • கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.
    • டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    விருத்தாசலம்:

    கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24-ந் தேதி இரவு வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், தனது செல்போனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாா்த்தபடி தனியார் பஸ்சை ஓட்டினார். அவரது அலட்சியத்தால் பஸ் விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    டிரைவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியதை சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறுகையில். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, செல்போனில் வேறு ஏதேனும் பார்க்கக்கூடாது என்று ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இதையும் மீறி யாரேனும் செல்போன் பார்த்தபடியோ அல்லது செல்போனில் பேசியபடியோ வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    • 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. சி.எஸ்.கே.-பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கள்ளச் சந்தையில் அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனையானது.

    இது தொடர்பான வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
    • இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 2-வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத் டைடன்சுடன் மோதுகிறது.

    இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000 விலைகளிலும் டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    டிக்கெட் வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ரூ.1,700, ரூ.6 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் விற்றன. அதைத் தொடர்ந்து ரூ.2,500, ரூ.3,500 விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் முழுமையாக விற்றன. கடைசியாக ரூ.4000 விலையிலான டிக்கெட்டும் விற்றன.

    விற்பனை தொடங்கிய 1½ மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொகாலி:

    ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

    இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது. 

    • டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் கான் 3 அரை சத்தங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார்
    • சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். 

    இந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் கான் 3 அரை சதங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    அதில், "தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை போன்ற ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?. தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மஹிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனது பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் மற்றும் கௌரவமாக கருதுவேன்' என்று பதிவிட்டிருந்தார்.

    அதன்படி, இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசளித்துள்ளார்.

    • பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது.
    • பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது. தற்போது ஆண்கள் அணி போட்டியில் களம் இறங்க போகிறது. இந்த ஆண்டு தடைகளை உடைத்து ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்புகிறேன். இதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

    பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    • கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கு நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    கடற்கரை எழும்பூர் வரையிலான 4வது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

     

    இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் மின்சார ரெயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.

    அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

    2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.

    சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
    • தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    மதுரை:

    இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.

    இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

    நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

    இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

    இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் மத்திய ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அப்போது ஒப்பந்தத்தில் சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர், மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான், துருவ் ஜூரல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர்.

    இதில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் ரூ.1 கோடிக்கான (கிரேடு-சி) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்க இந்திய ஆண்கள் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணன், தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்காக அவர்கள் 3 பேர் அடங்கிய குழுவை கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்கள் அணிகளின் உள்ளூர் போட்டியை நடத்தும் போது நிறைய சிக்கல்கள் எழுந்தன. வட இந்தியாவில், குறிப்பாக ரஞ்சி டிராபியின் போது, டிசம்பர், ஜனவரில் மோசமான வானிலை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆண்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்த டிராவிட், லட்சுமனண் அகர்கர் ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

    ×