என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கமா? -மவுனம் கலைத்த பிசிசிஐ
    X

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கமா? -மவுனம் கலைத்த பிசிசிஐ

    • கம்பீர் தலைமையில் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை.
    • சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்றார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.

    காம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது. அவரது தலைமை யின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

    சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. இதனால் அவரை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கடுமையாக சாடி இருந்தனர். எனவே அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற வதந்தி பரவியது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தனது மவுனத்தை கலைத்தது. பி.சி.சி.ஐ. செயலாளர் சைபியா இந்த வதந்திகளை நிராகரித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    140 கோடி மக்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு எல்லோரும் கிரிக்கெட் நிபுணர்கள்தான். அனைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இது ஒரு ஜன நாயக நாடு, யாரையும் எங்களால் வாயடைக்க முடியாது. ஊடகங்கள் உள்பட கருத்துக்களை உருவாக்குபவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு.

    இந்தத் துறையில் நிறைய யூகச் செய்திகள் பரவி வருகின்றன.மேலும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய வீரர்கள் அல்லது மற்றவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்கள் நிரம்பியுள்ளன.

    ஆனால் விஷயம் என்ன வென்றால் பி.சி.சி.ஐ-யில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஒரு குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். மறுபுறம் அணித் தேர்வுக்காக எங்களிடம் 5 தேர்வாளர்கள் உள்ளனர். அந்தப் பதவிக்கு வர அவர்களும் தகுதி பெற்று இருக்க வேண்டும். அந்த முடிவுகளையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு மாற்று கருத்து இருக்கக்கூடும்.

    ஆகவே அந்த கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அவற்றை நாம் பரிசீலிக்கவும் வேண்டும். ஆனால் இறுதி முடிவு எப்போதும் கிரிக்கெட் குழு மற்றும் தேர்வாளர்களால் தான் எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×