பேட்டை எப்படி பிடிப்பது என்று தெரியாதவர்கள் கிரிக்கெட் சங்கங்களில் இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான்.குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பேட்டை எப்படி பிடிப்பது என்று தெரியாதவர்கள் கிரிக்கெட் சங்கங்களில் இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
Published on

மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்தது. தேர்தலையொட்டி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவாருக்கு வேண்டியவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடைவிதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், தலைமை நீதிபதி கொண்ட அமர்வு கூறியதாவது:-

1986-ல் இருந்த 2023 வரை 164 உறுப்பினர்கள் இருந்தனர். 2023 முதல், நீங்கள் ஒரு பிரமாண்டமான குலுக்கலை நடத்தினீர்களா?.

இது சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைந்த ஒரு நாடு. ஓய்வு பெற்றவர்கள் அந்த வரிசையில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். நீங்கள் யாரைக் கொண்டு வருகிறீர்கள்? ஆட்டத்தைப் பற்றித் துளியும் தெரியாதவர்களை... மட்டையை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாதவர்களை... என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் எங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தும்படி செய்யாதீர்கள்.

கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான். ஹாக்கி சங்கம் என்பது ஹாக்கி வீரர்களால்தான் அறியப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு பெஞ்ச் தெரிவித்தது.

மேலும், மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அனுமதித்ததுடன், புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்து வாதங்களையும் முன்வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன், உயர் நீதிமன்றம் இந்த வாதங்களைக் கருத்தில் கொள்ளும் என்றும், இந்த வழக்கை விரைவாகத் தீர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com