மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை

திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
ருக்மணி
ருக்மணி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி‌ கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரவி வெளியே புறப்பட்டு சென்றார். ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

ருக்மணி 3 பேரையும் இதுவரை பார்த்ததில்லை. இருப்பினும் வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார்.

உறவினர்கள் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென்று ருக்மணியை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து கையை துண்டால் கட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.

இதை சற்றும் எதிர்பாராத ருக்மணி செய்வதறியாது திகைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ருக்மணி கட்டிப்போட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

உறவினர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com