என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East By Polls"

    • எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.

    கொங்கு மண்டலமான ஈரோடு கிழக்கு தொகுயில் கடந்த சட்டமன்ற தேர்வில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் களம் இறங்கிய த.மா.கா. வேட்பாளர் யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தார். எனவே இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    • தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார்.
    • டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது.

    இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ,பன்னீர்செல்வம் அதிரடி காட்டி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் நாங்களே போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்திடும் உரிமை எனக்கே உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோம் என்கிற நல்ல செய்தியை தற்போது உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தற்போது நானே தொடர்கிறேன்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுக்கு உள்ளன. இந்த அங்கீகாரத்தை 1½ கோடி தொண்டர்கள் எனக்கு வழங்கி உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு உரிமையும் எங்களுக்கு உள்ளது.

    கே:- தேர்தலில் போட்டியிட ஏ, பி, பார்மில் நீங்களும் கையெழுத்து போட வேண்டும். அவரும் (ஈ.பி.எஸ்.) கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலை தானே உள்ளது?

    ப:- இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஏ மற்றும் பி பார்மில் நான் கையெழுத்திடுவேன். அவர் கையெழுத்திடுவாரா? மாட்டாரா? என்பது அவருடைய விருப்பம்.

    கே:- அவர்களும் போட்டியிட்டால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே?

    ப:- உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக இருந்துகொண்டு இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வராத சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நாங்கள் தான் கலந்துகொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே:-உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டு சுயேட்சையாக போட்டியிடக்கூடிய நிலை உருவானதே?

    ப:- உள்ளாட்சி தேர்தலின் போது தான் ஒருங்கிணைப்பாளராகவும், அவர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தோம். அந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகி ஏ, பி, பார்மில் கையெழுத்திடுவதற்காக என்னிடம் வந்து கேட்டார். நான் அதில் கையெழுத்து போட்டு கொடுத்து அவரிடம் அனுப்பினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதில் கையெழுத்திடவில்லை.

    அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் கழக தொண்டர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இப்படி இரட்டை இலை சின்னம் முடங்கி இருந்ததற்கு நான் காரணம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் (சுயேட்சையாக) போட்டியிடவும் தயாராக உள்ளோம்.

    கே:- இப்போது அது தானே நடக்க வாய்ப்பு உள்ளது?

    ப:- உங்களுக்கு நன்றாகவே தெரியும். 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமாக ஒருமுகமாகவே நடத்தப்பட்டது. அதில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டோம். இதனை அனைத்து மக்களும் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் நன்கு அறிவார்கள்.

    பொதுக்குழுவை கூட்டுவதற்கு எனது இசைவு தேவை. எனது இசைவு இல்லாமலேயே 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அது சட்டவிரோதமான பொதுக்குழு என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்காகத்தான் தர்மயுத்தத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்.

    கே:- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? தற்போது தனித்தனியாக அறிவிப்பு கொடுப்பதன் மூலமாக கட்சியில் மேலும் பிளவு போன்ற நிலைதானே தொடரும்?

    ப:- எங்களை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவும் 50 ஆண்டு காலம் தொண்டர்களின் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கி உள்ளார்கள்.

    இந்த இயக்கம் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்த இயக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் எப்போதும் நினைக்கிறோம் என்றைக்கும் இப்படித்தான் இருப்போம்.

    இந்த நிமிடம் வரையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை 1½ கோடி தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான்.

    கே:- அ.தி.மு.க.வில் நீடிக்கும் இப்பிரச்சினை இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்தாதா?

    ப:- ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. ஒன்றே முக்கால் வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலிலேயே உள்ளது. எனவே உறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- தற்போதைய சூழலில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான நிலை ஏற்பட்டுவிடாதா?

    ப:- இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர் செல்வம் காரணமாக இருக்க மாட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- 23-ந்தேதி கூட்டப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

    ப:- அந்த கூட்டம் திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும். அதிலும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நல்லதொரு முடிவை எடுப்போம்.

    கே:- நீங்களும் போட்டியிட போவதாக கூறுகிறீர்கள்? பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்கிறீர்கள்? உங்கள் முடிவே குழப்பமாக உள்ளதே?

    ப:-இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கியது யார்? "நாங்கள் அல்ல. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும்.

    இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார்களோ அதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா?

    ப:- நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    கே:- ஆனால் அவர்கள் உங்களை சேர்க்க தயாராக இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்களே?

    ப:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதுதான் இப்போதும் எனது பதிவாகும்.

    கே:- தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் அவர்களிடம் ஏதும் பேசினீர்களா? இல்லை, அவர்கள் ஏதேனும் பேசினார்களா?

    ப:- இதுவரை யாரும் பேசவில்லை.

    கே:- வேட்பாளரை எப்போது எப்படி முடிவு செய்வீர்கள்?

    ப:- அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து மாவட்ட செயலாளர்கள், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்போம்.

    கே:- இடைத்தேர்தலை காரணமாக வைத்து பிரிந்துள்ள அணிகளை ஒன்றிணைக்க சூழல் உள்ளதா?

    ப:- அதுபோன்ற சூழல் இருந்தால் நாங்கள் வரவேற்போம்.

    கே:- அதற்கான முன்னெடுப்பை நீங்கள் எடுப்பீர்களா?

    ப:- அனைவரும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக அது முடியும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    கே:- அவர்கள் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தரப்பில் அதுபோன்று வேட்பாளரை நிறுத்தினால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

    ப:- நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.

    கே:- உச்சநீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறீர்களா?

    ப:- நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

    கே:- சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?

    ப:- இதற்கு சட்டப் பேரவைத் தலைவர் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின் படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இல்லை என்று அவரே தெளிவுபடுத்திக்கொள்ள சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டுமே உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

    சட்டப்பேரவை தலைவரின் சுய உரிமை ஆகும்.

    கே:- தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை எந்த ரெக்கார்டு உள்ளது?

    ப:- தற்போது வரையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்கிற ரெக்கார்டு தான் உள்ளது.

    கே:- எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதே?

    ப:- தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார். டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். அதில் தான் வாதங்கள், பிரதிவாதங்கள் எல்லாம் முடிவடைந்து தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளோம்.

    கே:- நீங்கள் இப்படி தனித்தனியாக போட்டியிடுவது ஆளும் கட்சிக்குத் தானே சாதகமாக அமையும்?

    ப:- இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய இடம் இதுவல்ல. நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்களிடம் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும்.

    கே:- இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்கிற பார்முலா உள்ளதே?

    ப:- இந்த தேர்தலில் அந்த பார்முலாவை முறியடித்து காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் யாத்திரையில் டெல்லி சென்று பங்கேற்ற கமல்ஹாசன், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தனியாகவும் விவாதித்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது. இந்த 2 கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    மற்ற கட்சிகளில் நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. பா.ம.க. போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் நாளை (23-ந்தேதி) காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் யாத்திரையில் டெல்லி சென்று பங்கேற்ற கமல்ஹாசன், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தனியாகவும் விவாதித்தார்.

    இதன்மூலம் நான் எந்த பக்கம் இருக்கிறேன் என்பதை கமல்ஹாசன் 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

    இதன்மூலம் நாங்கள் பிரித்த ஓட்டுகளே பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான த.மா.கா. யுவராஜாவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி விவாதிப்பதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகிகளையும் கமல்ஹாசன் சென்னைக்கு அழைத்துள்ளார். அவர்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    • அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.
    • எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கப் போவது எந்த கட்சி? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த முறை த.மா.கா. போட்டியிட்ட நிலையில் இந்த முறை அ.தி.மு.க. களம் இறங்க முடிவு செய்தது. இதற்காக த.மா.கா.விடம் பேசி உறுதியும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் நாங்களும் போட்டியிடப் போகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருக்கிறார்.

    அத்துடன் இருதரப்பினரும் சென்னையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசி ஆதரவும் கோரினார்கள்.

    இரு தரப்பும் ஆதரவு கோரியதால் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற தர்ம சங்கடமான நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி அ.தி.மு.க. என்பதால் அந்த கட்சி போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை.

    ஆனால் இரு தரப்பும் மல்லு கட்டுவதால் பா.ஜனதாவும் யோசிக்கிறது. களம் இறங்கி பலத்தை பார்த்து விடுவது என்று யோசித்த பா.ஜனதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் நிலைமை சாதகமாகி இருக்கிறது.

    யாருக்கு ஆதரவளித்தாலும் கூட்டணிக்குள் பாதிப்பு வரும் என்பதை காரணம் காட்டி பா.ஜனதாவே போட்டியிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டுப்பெறலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்ததுமே தேர்தல் பணிகளை கவனிக்க பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 14 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

    அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான சரஸ்வதி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.

    இவர்கள் தொகுதி முழுவதும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாநில தலைமைக்கு வழங்கி உள்ளனர்.

    இதுதவிர கட்சி மேலிடம் அனுப்பிய தனிக்குழு ஒன்றும் சர்வே நடத்தி உள்ளது. இந்த குழுக்களின் அறிக்கை இன்று கொடுக்கப்படுகிறது.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தொகுதியின் கள நிலவரத்தை ஆய்வு செய்கிறார்கள். தொகுதி நிலவரம் சாதகமாக இருந்தால் பா.ஜனதா கண்டிப்பாக போட்டியிடும்.

    அதேநேரம் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சமாதானப்படுத்தி தங்களுக்காக விட்டுக் கொடுக்கும்படி கேட்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பா.ஜனதா தேர்தல் குழுவினர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக களம் இறங்கினால் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும்.

    எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமரசம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதேபோல் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பா.ஜனதா போட்டியிட்டால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுடன் நேருக்குநேர் மோத பா.ஜனதா தயாராகி வருகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக தங்களது செல்வாக்கை தெரிந்து கொள்ளும் வகையில் பா.ஜனதா இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.

    அ.தி.மு.க.வில் ஏதாவது ஒரு அணியை துணிந்து ஆதரிப்பதா? அல்லது துணிந்து களம் இறங்குவதா? என்ற இரண்டு வழிகளும் தான் பா.ஜனதாவுக்கு உள்ளது.

    இதில் எதை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    • காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடமும் நேரில் அழைத்து கருத்து கேட்டார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.

    அதற்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடம் நேரில் கருத்து கேட்டார். அவருடன் இளங்கோவன், விஷ்ணு பிரசாத் எம்.பி., ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் கலந்து கொண்டார்.

    பின்னர் சஞ்சய் சம்பத் ஈரோடு தொகுதியில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும்.
    • தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், பொருளாளர் பானுமதி, துணைச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

    ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்றும் தொழிற்சங்க 3-ம் ஆண்டு துவக்க விழாவிற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் மாடசாமி, சரவணகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று வருகிற 27-ந்தேதி அறிவிக்கப்படும். அங்கு நானே போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றதாகும்.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

    தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

    இதற்காக கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கோரி உள்ளார்கள். பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்டன.

    எனவே பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று அண்ணாமலை வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார்.

    எனவே அ.தி.மு.க.வுக்குத் தான் பா.ஜனதாவின் ஆதரவு என்பது உறுதியாகி விட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லி மேலிடத்தில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்கள்.

    இன்று மாலையில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்கிறார்கள்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
    • 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அது மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களான ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டார்.

    இதை தொடர்ந்து இன்று முதல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    ஈரோடு தொகுதியில் நடைபெறும் தேர்தல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது.

    இதற்காக 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.

    இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ. ரவி, தா.உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், நல்லசிவம், பத்மநாபன், பா.மு.முபாரக், மதியழகன், ராஜேஸ்குமார், மதுரா செந்தில், பெ.பழனியப்பன், பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகிய 20 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    அமைச்சர்களில் கே.என்.நேரு, முத்துசாமி மட்டுமே ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். மற்ற அமைச்சர்கள் இன்னும் ஈரோடு செல்லவில்லை.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுவதால் அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் ஈரோடு செல்ல உள்ளனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 280 பூத் (வாக்குச்சாவடி) உள்ளது. அதை 11 அமைச்சர்களுக்கும் பிரித்து கொடுத்து அதற்கேற்ப பணியாற்றுமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசார பணிகளை சென்னையில் இருந்தபடி கவனித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 2-வது வாரம் அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தேதியில் பிரசாரத்திற்கு செல்வார் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அவர்களை விட தி.மு.க.வினர்தான் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பே தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஈரோட்டில் 'கை' சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது.
    • இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர். அப்போது திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

    இதேபோல் மனித உரிமைகள் கழகமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரத்திலும் ஈடுபடுவோம் என்றார். 

    • நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம்.
    • தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் துரைசாமி என்பவர் கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு கிடைக்காததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, கலெக்டரிடம் இருந்து முறையான அழைப்பு கடிதம் வராததால் கலந்து கொள்ளவில்லை.

    நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவோம் என்றார்.

    அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறினார்கள்.

    கட்சி அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி.
    • நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்', 'கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அவர் அ.தி.மு.க.வை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்.

    அவர் பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா. தனியாக கூட நிற்க வேண்டாம். அ.திமு.க. கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா. தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.

    எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர். அவர்களின் கூட்டணியில் தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்களின் பலம். நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×