என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர் செல்வம்"

    • ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன்.
    • நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன்.

    2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள். ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள். கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

    ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. அப்போது ஓ.பி.எஸ். செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.

    இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ. பன்னீர் செல்வம் "ஜெயலலிதா என்ன சொல்வாரோ அதை மட்டும்தான் பேசி இருக்கிறேன். நான் பதில் கூற வேண்டும் என வைகோ விரும்பினால் அதற்கு பதில் கூறுவேன். வை.கோ.வின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை பேசுவது ஏன்?" எனப் பதில் அளித்தார்.

    • செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.

    இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.

    இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.

    அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.

    செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து, கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை (அதாவது இன்று) விளக்கம் அளித்து பேச உள்ளேன். கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு இதற்கான விளக்கத்தை அளிப்பேன்,' என்றார்.

    இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
    • எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.

    மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.

    அப்போது, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.

    எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.

    ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம்.

    பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன்.
    • கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள்.

    எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது.

    இதற்கிடையே அக்கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். முன்னதாக ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவரகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    செய்தியாளர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர் அதை செய்வார் என்று நம்புகிறேன்.

    பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி மேலிடம் மீது எனக்கு அதிருப்தி இல்லை. கூட்டணியில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன் " என்றார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.
    • அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    அப்போது ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    * முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை.

    * அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை.

    * கல்வி நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.

    * பா.ஜ.க. வில் இருந்து தற்போது எந்த அழைப்பும் வரவில்லை.

    * அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் மேற்பார்வையில் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளேன்.

    * நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த பாஜக- அதிமுக தற்போது இணைந்துள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததற்காக வாழ்த்துகள்.

    இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    • அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
    • வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் நேற்று காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்ததாகவும், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியாலில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஜான் என்கிற ரவடியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக்கருந்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    • தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது.
    • ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டாஸ்மாக்கில் இருந்து வரி கட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது.

    அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. அதனை தடுக்கும் பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருக்கின்றது.

    அ.தி.மு.க.எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அ.தி.மு.க. இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றது.

    பிரிந்த அ.தி.மு.க. ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ, அதற்காக பாடுபட வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 2026-ல் வர வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்த சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.

    அதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும்.

    அனைவரும் ஒன்றிணைந்து 2026-ல் அ.தி.மு.க ஆட்சி மலரசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    சென்னை:

    மத்திய மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக நாளை இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவில் அங்கு தூங்குகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்ட மீண்டும் முயற்சிக்கிறார்.

    அதற்காகவே நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே சென்னை வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    நாளை இரவு இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார். இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றைத்தலைமை அது எடப்பாடி பழனிசாமி. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார் என்றனர்.

    • மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
    • அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.

    இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகின்ற நிலையில், கடந்த 2 நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, பயிர்களும் மூழ்கிப் போய் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், 2015-ம் ஆண்டு போன்று பெருமழை பெய்தால் என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது நிலவுகிறது.

    இது தொடர்பாக அரசின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதையும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதையும் பத்திரிகைகள் படம் போட்டுக்காண்பிக்கின்றன. தூக்கமின்றி மக்கள் சிரமப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

    பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். 2020-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அவரே முதல்-அமைச்சராக வந்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே பரவலாக உள்ளது.

    இதேபோன்று, இதரப் பயிர்களுக்கான இழப்பீடு, சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு, படுகாயமடைந்தவர்களுக்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு ஆகியவற்றை 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி அரசு அளித்து வருவதாகவும், ஏழு ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இழப்பீடு குறைந்த பட்சம் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்றும், இதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்த பட்சம் 2 மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு இரு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பலம் என்பது தொடர்ந்து வரும் அரசியல் வரலாறு. முதல் முதலாக 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றது.

    அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் மறு ஆண்டே தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. அப்போது பா.ஜனதாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.

    மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் இரு திராவிட கட்சிகளின் ஆதரவும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

    நாடுமுழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்ற அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அ.தி.மு.க.வுக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மோடி சமரசப்படுத்தினார். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 ஆண்டுகளையும் நிறைவு செய்தார்கள்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து நின்ற டி.டி.வி. தினகரனையும் இணைத்துக்கொள்ளும்படி பா.ஜனதா வற்புறுத்தியது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கவில்லை.

    தேர்தலில் தி.மு.க. வென்றது. ஆனால் 50 தொகுதிகளுக்கு மேல் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது பா.ஜனதாவின் வேண்டுகோளை அ.தி.மு.க. நிராகரித்ததே தோல்விக்கு காரணம் என்று பா.ஜனதா கூறியது.

    அ.தி.மு.க. கூட்டணியால் சட்டமன்றத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சென்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவு அந்த கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவில் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இரட்டை தலைமைதான் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூர்வாங்க பணிகளை பா.ஜனதா தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை பா.ஜனதா மேலிடம் கண்காணித்து வருகிறது. அதில் பா.ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தமிழகத்தில் வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

    இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜனதா மேலிடம் சரிகட்ட விரும்புகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதற்காக பலமுறை முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்த பிரதமர் மோடியை வழியனுப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அருகருகே நின்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை கூட தவிர்த்தனர்.

    மறுநாள் சென்னை வந்த அமித்ஷா சமரச முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியும் பா.ஜனதா தலையிட்டு சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

    இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து 10 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார்.

    இந்த சந்திப்பின் போதும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அந்த கருத்துக்களை கேட்ட அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள். குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபடாவிட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும். சட்ட மன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதை போல் பாராளுமன்ற தேர்தலில் நிகழ்ந்தால் அது பா.ஜனதாவுக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.

    சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியை பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
    • பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை மாவட்டம் மற்றும் நகரம் ஒன்றிய நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 3ம் நாளான நேற்று சேலம் திருச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தங்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆலோசித்தனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வையே எதிர்பார்க்கின்றனர். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரியில் மாபெரும் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×