என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிருக்கான இழப்பீட்டினை ரூ.75 ஆயிரமாக வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
- பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகின்ற நிலையில், கடந்த 2 நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, பயிர்களும் மூழ்கிப் போய் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், 2015-ம் ஆண்டு போன்று பெருமழை பெய்தால் என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது நிலவுகிறது.
இது தொடர்பாக அரசின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதையும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதையும் பத்திரிகைகள் படம் போட்டுக்காண்பிக்கின்றன. தூக்கமின்றி மக்கள் சிரமப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். 2020-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அவரே முதல்-அமைச்சராக வந்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே பரவலாக உள்ளது.
இதேபோன்று, இதரப் பயிர்களுக்கான இழப்பீடு, சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு, படுகாயமடைந்தவர்களுக்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு ஆகியவற்றை 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி அரசு அளித்து வருவதாகவும், ஏழு ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இழப்பீடு குறைந்த பட்சம் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்றும், இதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்த பட்சம் 2 மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.