என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?- சசிகலா, ஓ.பி.எஸ். நம்பிக்கையோடு காத்திருப்பு
- சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
- தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.
தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு இரு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பலம் என்பது தொடர்ந்து வரும் அரசியல் வரலாறு. முதல் முதலாக 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றது.
அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் மறு ஆண்டே தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. அப்போது பா.ஜனதாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.
மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் இரு திராவிட கட்சிகளின் ஆதரவும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
நாடுமுழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்ற அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அ.தி.மு.க.வுக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மோடி சமரசப்படுத்தினார். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 ஆண்டுகளையும் நிறைவு செய்தார்கள்.
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து நின்ற டி.டி.வி. தினகரனையும் இணைத்துக்கொள்ளும்படி பா.ஜனதா வற்புறுத்தியது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கவில்லை.
தேர்தலில் தி.மு.க. வென்றது. ஆனால் 50 தொகுதிகளுக்கு மேல் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது பா.ஜனதாவின் வேண்டுகோளை அ.தி.மு.க. நிராகரித்ததே தோல்விக்கு காரணம் என்று பா.ஜனதா கூறியது.
அ.தி.மு.க. கூட்டணியால் சட்டமன்றத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சென்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவு அந்த கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.
நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவில் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இரட்டை தலைமைதான் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.
2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூர்வாங்க பணிகளை பா.ஜனதா தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை பா.ஜனதா மேலிடம் கண்காணித்து வருகிறது. அதில் பா.ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தமிழகத்தில் வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.
இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜனதா மேலிடம் சரிகட்ட விரும்புகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதற்காக பலமுறை முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்த பிரதமர் மோடியை வழியனுப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அருகருகே நின்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை கூட தவிர்த்தனர்.
மறுநாள் சென்னை வந்த அமித்ஷா சமரச முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியும் பா.ஜனதா தலையிட்டு சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.
இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து 10 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார்.
இந்த சந்திப்பின் போதும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த கருத்துக்களை கேட்ட அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள். குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. ஒன்றுபடாவிட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும். சட்ட மன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதை போல் பாராளுமன்ற தேர்தலில் நிகழ்ந்தால் அது பா.ஜனதாவுக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.
சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியை பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.